செய்திகள்

மின்சார ரெயில்கள் நாளை ரெகுலர் சர்வீசாக இயக்கப்படும்

Published On 2018-01-06 07:12 GMT   |   Update On 2018-01-06 07:12 GMT
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் நீடித்து வருவதால் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மின்சார ரெயிலின் சேவையை ரெகுலர் சேவையாக இயக்க தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.
சென்னை:

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக மின்சார ரெயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

சென்னையில் மாநகர பஸ் சேவை முடங்கியதால் மின்சார ரெயில்களை முழுமையாக நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அனைத்து மார்க்கத்தில் செல்லக்கூடிய மின்சார ரெயில்களிலும் மக்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தனர்.

எல்லா ரெயில் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் நிறைந்து வழிகிறது. நேற்று முன்தினம் இரவு தொடங்கிய இந்த நெரிசல் பயணம் இன்று 3-வது நாளாக நீடிக்கிறது.

சென்ட்ரல் மூர்மார்க்கெட்டில் இருந்து இயக்கப்படும் அனைத்து மின்சார சேவைகளும் கடற்கரை-தாம்பரம், செங்கல்பட்டு சேவையிலும், பறக்கும் ரெயில் சேவையிலும் நள்ளிரவு வரை மக்கள் கூட்டம் கூட்டமாக பயணம் செய்து வருகின்றனர்

இதுதவிர மெட்ரோ ரெயிலிலும் அதிகளவு பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். ஆட்டோ, ஷேர் ஆட்டோக்களில் அதிக கட்டணம் கொடுப்பதற்கு பதிலாக மின்சார ரெயில் பயணத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

நேற்று ஒரே நாளில் மட்டும் 14 லட்சம் பேர் மின்சார ரெயிலில் பயணம் செய்துள்ளனர். சராசரியாக மூர் மார்க்கெட்-அரக்கோணம் மார்க்கத்தில் 3.92 லட்சம் பயணிகளும், கடற்கரை-தாம்பரம் மார்க்கத்தில் 5.55 லட்சம் பயணிகளும் தினமும் பயணம் செய்கின்றனர்.

மூர் மார்க்கெட்- கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் 1.2 லட்சம் பயணிகளும் கடற்கரை-வேளச்சேரி பறக்கும் ரெயிலில் 1.1. லட்சம்பயணிகளும் சராசரியாக பயணிக்கின்றனர். மின்சார ரெயில்களில் 11 லட்சத்து 50 ஆயிரம் பேர் சராசரியாக தினமும் பயணம் செய்து வருகிறார்கள். ஆனால் பஸ் ஸ்டிரைக் காரணமாக 2½ லட்சம் பேர் மின்சார ரெயிலில் கூடுதலாக பயணம் செய்துள்ளனர்.

மேலும் வேலை நிறுத்தம் நீடித்து வருவதால் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மின்சார ரெயிலின் சேவையை ரெகுலர் சேவையாக இயக்கவும் தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.


ஞாயிற்றுக்கிழமைகளில் மற்ற நாட்களை விட சர்வீஸ் குறைவாக இயக்கப்படும். அனைத்து பகுதிகளுக்கும் நீண்ட நேர இடைவெளிக்கு பிறகுதான் மின்சார ரெயில்கள் இயக்கப்படும். மற்ற நாட்களில் ஒவ்வொரு சேவைக்கும் இடையே உள்ள நேரம் மிகவும் குறைவாக அடுத்தடுத்து ரெயில்கள் புறப்பட்டு செல்லும்.

ஆனால் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் அனைத்து பகுதிக்கும் குறைவான அளவில் மின்சார ரெயில்கள் இயக்கப்படும். தற்போது மக்கள் பஸ் போக்குவரத்து இல்லாமல் அவதிப்படுவதால் நாளை ரெகுலர் சர்வீசாக இயக்கப்படுகிறது.

மூர்மார்க்கெட்டில் இருந்து அரக்கோணத்திற்கு 151 சேவைகளும் செங்கல்பட்டுக்கு 74 சேவைகளும், கடற்கரை- தாம்பரம் இடையே 224 சேவைகளும் நாளை வழக்கம்போல் இயக்கப்படுகிறது. பறக்கும் ரெயில் சேவை ஞாயிற்றுக்கிழமையில் 96 சேவைகளாக இருக்கும். ஆனால் நாளைய தினம் மற்ற நாட்களைபோல் 132 சேவை இயக்கப்படுகிறது.

பொதுமக்கள் நலன் கருதி கூடுதல் சேவையை தெற்கு ரெயில்வே அளிக்க திட்டமிட்டுள்ளது.

Similar News