3 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம்- நீட் பயிற்சியை மாற்றி அமைக்க திட்டம்
சென்னை:
தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்கான முதல்கட்ட கலந்தாய்வு சமீபத்தில் நடந்தது.
அதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவர்களில் 20 பேருக்கு இடம் கிடைத்துள்ளது. அவர்களில் 7 பேர் அரசு பள்ளிகளில் படித்தவர்கள். 13 பேர் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்றவர்கள்.
தமிழ்நாட்டில் மொத்தம் 22 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. அவற்றில் 2,447 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. நடந்து முடிந்த முதல்கட்ட கலந்தாய்வில் அரசு பள்ளிகளில் படித்த 3 மாணவர்களுக்கு மட்டுமே அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது.
மற்ற 4 மாணவர்களுக்கு தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீடு (கோட்டா) மூலம் இடம் கிடைத்துள்ளது. அரசு மருத்துவ கல்லூரிகளில் பயில மாணவர்களிடம் இருந்து ஆண்டுக்கு ரூ.13,500 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அதே நேரத்தில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் மூலம் இடம் பெற்றுள்ளவர்கள் ஆண்டுக்கு தலா ரூ.3.50 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை கட்டணம் செலுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் 2016-ம் ஆண்டு வரை பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால் கடந்த ஆண்டு (2017) முதல் மத்திய அரசின் ‘நீட்’ தேர்வு அடிப்படையில் மருத்துவ படிப்பு ஒதுக்கீடு நடைபெறுகிறது.
‘நீட்’ தேர்வுக்கு கடுமையான பயிற்சி மற்றும் கூடுதல் பணச் செலவு, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் போன்றவை காரணமாக தமிழக மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு எட்டாக்கனியாகிவிட்டது.
எனவே தமிழக அரசு கடந்த ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான விசேஷ பயிற்சி அளித்தது. அதற்காக பல கோடி ரூபாயை செலவு செய்தது.
இதை தொடர்ந்து அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெற்ற பள்ளிகளை சேர்ந்த 9,154 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதினார்கள். அதில் 1,344 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் 10 மாணவர்கள் 300 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றனர். 42 பேர் 200-க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
அரசு உதவி பெறும் பழைய வண்ணாரப்பேட்டை சங்கரலிங்க நாடார் மேல் நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஜெ.சரண் அதிக பட்சமாக 416 மதிப்பெண் பெற்றார். இதனால் இவருக்கு வேலூர் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தது.
நீட் தேர்வு வருவதற்கு முன்பு தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களில் 30 பேருக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்தது. கடந்த ஆண்டு நீட் தேர்வு அறிமுகமான போது 5 பேர் மட்டுமே இடம் பெற முடிந்தது. இந்த ஆண்டு 7 மாணவர்களுக்கே இடம் கிடைத்துள்ளது.
அரசு பள்ளிகளில் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் மருத்துவ படிப்பில் சேர்ந்து பயில வேண்டும் என்ற பேரார்வத்துடன் உள்ளனர். ஆனால் அவர்களால் நீட் தேர்வுக்காக கடும் பயிற்சி செய்ய போதிய நேரம் கிடைப்பதில்லை.
ஏனெனில் அவர்கள் ஏழை குடும்பங்களைச் சேர்ந்தவர்களாகவும், கிராமப்புறங்களில் வசிப்பவர்களாகவும் உள்ளனர். எனவே, அதிக அளவிலான அரசு பள்ளி மாணவர்கள் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேரும் வகையில் அதிக மதிப்பெண் பெற நீட் தேர்வு பயிற்சியை மாற்றியமைக்க தமிழக அரசின் பள்ளி கல்வி துறை திட்டமிட்டுள்ளது. #Neetexam