மேற்கு வங்கத்தில் மருத்துவமனை கழிவறையில் பிறந்த குழந்தை... தெருநாய் கவ்விச்சென்ற அதிர்ச்சி சம்பவம்
- புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பங்குரா மாவட்டத்தில் உள்ள பெங்கால் அரசு மருத்துவமனையில் கடந்த 18-ந்தேதி திடீரென ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக ஒரு பெண் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து கழிவறைக்கு சென்ற பெண்ணுக்கு ஆறு மாத குறைப்பிரசவத்தில் குழந்தை பிறந்தது. பிறந்த பச்சிளங் குழந்தையை மருத்துவமனை வளாகத்தில் சுற்றித்திரிந்த நாய் ஒன்று கவ்விச்சென்றது.
இது தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சம்பவத்தைத் தொடர்ந்து, அந்தப் பெண் மேல் சிகிச்சைக்காக பிஷ்ணுபூர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இது குறித்து விசாரணை நடத்தப்படும் என மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், உதவிக்காக பலமுறை அழைத்த விடுத்த போதிலும் எந்த ஊழியர்களும் தங்களுக்கு உதவ வரவில்லை என்று பெண்ணின் குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.
அதனிடையே, மருத்துவமனையின் அலட்சியம் குறித்து, முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான பிரதிமா பூமிக் கூறியதாவது:- மேற்கு வங்காளத்தில் உள்ள [பங்குராவில்] சோனாமுகியின் அதிர்ச்சிகரமான சம்பவம், மம்தா பானர்ஜியின் 'உலகத் தரம் வாய்ந்த' சுகாதாரத் தலைமையின் கீழ் உள்ள கடுமையான யதார்த்தத்தை அம்பலப்படுத்துவதாக கூறி பிறந்த குழந்தையை நாய் கவ்விக்கொண்டு செல்லும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
கொல்கத்தாவின் ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் முதுகலை பயிற்சி மருத்துவப் பெண் ஒருவர், பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், குறைந்த மாதத்தில் பிறந்த குழந்தையை நாய் ஒன்று கவ்வி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.