இந்தியா

நாளை ஓட்டு எண்ணிக்கை: மராட்டிய மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்குமா?

Published On 2024-11-22 05:41 GMT   |   Update On 2024-11-22 05:41 GMT
  • தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பு முடிவுகள் வெளியீடு.
  • காங்கிரஸ் கூட்டணிக்கு 100 இடங்களும் கிடைக்கும் என கணிப்பு.

மும்பை:

மராட்டிய மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 சட்டசபை தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் ஒரே கட்டமாக தேர்தல் நடை பெற்றது.

இந்த தேர்தலில் பா.ஜனதா சிவசேனா(ஏக்நாத் ஷிண்டே அணி), தேசியவாத காங்கிரஸ் (அஜித்பவார் அணி) ஆகிய கட்சிகள் ஆளும் மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், உத்தவ்சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் அணி) ஆகிய எதிர்கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

இந்நிலையில் தேர்தல் வாக்குப்பதிவில் மொத்தம் 62 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு ஓட்டு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. நாளை (சனிக்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இதற்கிடையே வாக்குப் பதிவு முடிவடைந்த சில மணி நேரங்களில் அங்கு ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்பது குறித்து பல்வேறு நிறுவனங்கள் எடுத்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பு முடிவுகள் வெளியாகின. இதில் பெரும்பாலான கருத்து கணிப்புகளில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைக்க தேவையான 145 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என கூறப்பட்டிருந்தது.


இந்நிலையில் மேலும் 2 கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது. அதன்படி ஆக்சிஸ் மை இந்தியா நடத்திய கருத்து கணிப்பின் படி பா.ஜ.க கூட்டணி 178-200 இடங்களை வெல்லும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் மகா விகாஸ் அகாடி கூட்டணி 82-102 இடங்களை வெல்லும் என அந்நிறுவனம் கணித்துள்ளது.

இதேபோல டூடேஸ் சாணக்கியா கருத்துக் கணிப்பில் பா.ஜ.க கூட்டணிக்கே 175 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 100 இடங்களும் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News