பொதுப்பணித்துறை அலுவலகத்தை சிவா எம்.எல்.ஏ. முற்றுகை
புதுச்சேரி:
உப்பனாறு வாய்க்காலில் மழை காலம் தொடங்கும் முன்பே தூர்வார வேண்டும் என்று தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளரும், உருளையன் பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான சிவா பொதுப்பணித்துறையினரிடம் பல முறை கோரிக்கை விடுத்தார். ஆனால், உப்பனாறு வாய்க்கால் தூர்வாரப்படவில்லை.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக பெய்த தொடர் மழையால் உப்பனாறையொட்டி உள்ள குடியிருப்புகளில் கழிவுநீர் உள்புகும் நிலை இருந்து வருகிறது.
இந்த நிலையில் உப்பனாறு வாய்க்காலை தூர் வாராததை கண்டித்தும், உடனடியாக தூர்வார கோரியும் சிவா எம்.எல்.ஏ. தலைமையில் உருளையன் பேட்டை தொகுதி மக்கள் இன்று பொதுப்பணித்துறை தலைமை என்ஜினீயர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இந்த போராட்டத்தில் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் மாறன், செயற்குழு உறுப்பினர் தைரியநாதன், தொகுதி செயலாளர் சக்திவேல், தி.மு.க. மாநில மாணவர் அணி அமைப்பாளர் மணிமாறன் மற்றும் தொகுதி பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
அப்போது தலைமை என்ஜினீயர் சண்முகசுந்தரம் அலுவலகத்தில் இல்லை. இதையடுத்து அங்கிருந்த அதிகாரிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட சிவா எம்.எல்.ஏ.விடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால், அதனை சிவா எம்.எல்.ஏ. ஏற்க மறுத்து விட்டார்.
இதையடுத்து பொதுப் பணித்துறை தலைமை என்ஜினீயர் சண்முகசுந்தரம் செல்போனில் தொடர்பு கொண்டு சிவா எம்.எல்.ஏ. விடம் பேசினார்.
அப்போது உப்பனாறு வாய்க்காலை தூர்வார உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
அதனை ஏற்று சிவா எம்.எல்.ஏ. முற்றுகை போராட்டத்தை கைவிட்டார். பின்னர் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொகுதி மக்களுடன் அங்கிருந்து கலைந்து சென்றார்.