கடலூரில் போலீஸ்காரர் தாக்கியதில் வாலிபர் காயம்- பொதுமக்கள் முற்றுகை
கடலூர்:
கடலூர் திருவந்திபுரத்தை சேர்ந்தவர் தயாளன் (வயது 36), கட்டிட தொழிலாளி. பில்லாளி தொட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (45), எலக்ட்ரிசியன். இவர்கள் 2 பேரும் இன்று திருவந்திபுரத்தில் இருந்து புதுவைக்கு ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
புதுவையில் உள்ள மதுக்கடையில் 2 பேரும் மது வாங்கி குடித்தனர். பின்னர் அவர்கள் மோட்டார் சைக்கிளில் புதுவையில் இருந்து திருவந்திபுரத்துக்கு புறப்பட்டனர். அவர்கள் கடலூர் நெல்லிக்குப்பத்தை அடுத்த மருதாடு பகுதியில் உள்ள சோதனை சாவடி அருகே வந்து கொண்டிருந்தனர்.
அந்த சோதனை சாவடியின் குறுக்கே தடுப்பு கட்டை வைக்கப்பட்டிருந்தது. இதை கண்டித்து கிருஷ்ணனும், தயாளனும் சத்தம்போட்டபடி மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் காரர் செல்வம் மோட்டார் சைக்கிளில் சென்ற தயாளனை தாக்கினார். இதில் அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து மயங்கி கீழே விழுந்தார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து கிருஷ்ணன் மற்றும் அந்த பகுதி பொதுமக்களும் போலீஸ்காரர் செல்வத்தை முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அதன்பின்னர் காயமடைந்த தயாளனை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று காயமடைந்த தயாளனிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் மதுவிலக்கு சோதனை சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் செல்வம் குடிபோதையில் இருந்ததாகவும், அதனால் தன்னை தாக்கியதாகவும் கூறினார்.
இதைத்தொடர்ந்து கடலூர் துணைபோலீஸ் சூப்பிரண்டு லாமேக், பண்ருட்டி மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.