செய்திகள்

திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு- பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை பெற முடியாமல் தவிப்பு

Published On 2018-11-03 10:55 GMT   |   Update On 2018-11-03 10:55 GMT
திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு, பன்றிகாய்ச்சலுக்கு சிகிச்சை பெறமுடியாமல் நோயாளிகள் தவித்து வருகின்றனர்.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் நகரில் மையப்பகுதியில் மாவட்ட தலைமை ஆஸ்பத்திரி அமைந்துள்ளது. இந்த ஆஸ்பத்திரிக்கு வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, நத்தம், அய்யலூர், வடமதுரை மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

வழக்கமாக 500 பேர் தினசரி சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது மர்மகாய்ச்சல் வேகமாக பரவி வருவதால் தினசரி அரசு ஆஸ்பத்திரிக்கு 1000-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.

ஆனால் இங்கு போதிய அளவு சிகிச்சை பெற வசதி இல்லாததால் நோயாளிகள் தவித்து வருகின்றனர்.

மொத்தம் 744 படுக்கைகள் உள்ளன. காய்ச்சல் தீவிரமாக உள்ளவர்களுக்கு கொசுவலையுடன் படுக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் ஒரு சிலவற்றில் மெத்தைகள் இல்லாமல் கட்டில் மட்டுமே உள்ளது.

மேலும் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைப்பதில்லை. பன்றிகாய்ச்சலுக்கு சிகிச்சை பெற மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கின்றனர்.

இங்கு அந்த வசதி இல்லாததால் தனியார் ஆஸ்பத்திரிகளில் ரூ.3500 வரை கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

ஏழை எளிய மக்கள் வேறு வழியின்றி மதுரைக்கு சென்று வருகின்றனர். எனவே திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியை மருத்துவக்கல்லூரியாக தரம் உயர்த்த வேண்டும் என பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News