புதுக்கோட்டை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட பிரபல ரவுடிகள் கைது
விராலிமலை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆவூர் அருகே உள்ள முனிப்பட்டியை சேர்ந்தவர் ரவி (வயது 40). இவர் சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் புதுக்கோட்டை-திருச்சி சாலையில் மாத்தூர் நோக்கி சென்றார். மண்டையூர் சாலை அருகே சென்றபோது 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை மறித்து, ரவியின் கழுத்தில் அரிவாள் மற்றும் கத்தியை வைத்து மிரட்டி, அவரிடம் இருந்த ரூ.1,600-ஐ பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ரவி, அக்கம், பக்கத்தினர் உதவியுடன் 2 வாலிபர்களையும் விரட்டி சென்றார். அப்போது அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட மண்டையூர் போலீசார், 2 வாலிபர்கள் வந்த மோட்டார் சைக்கிளை மறித்தனர். ஆனால் அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்றதால், போலீசார் விரட்டிச்சென்று அவர்களை மடக்கி பிடித்தனர்.
இதையடுத்து அந்த வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த செல்வக்குமார்(34), திருச்சி திருவானைக்காவல் பகுதியை சேர்ந்த சுந்தரபாண்டி(35) என்பதும், அவர்கள் மாத்தூர் சிதம்பரம் நகரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து, திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியை சேர்ந்த வினோத்குமாருடன்(35) சேர்ந்து கடந்த 7 மாதங்களாக கொள்ளை உள்பட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசார், அவர்களை சிதம்பரம் நகர் வீட்டிற்கு அழைத்து சென்று, அங்கிருந்த வினோத்குமாரை பிடித்தனர். பின்னர் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து, கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள், புதுக்கோட்டை , திருச்சி, பெரம்பலூரில் திருட்டு உள்பட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் சுந்தரபாண்டி மீது 7 கொலை வழக்குகளும், 3 கொள்ளை வழக்குகளும், செல்வக்குமார் மீது 4 கொள்ளை முயற்சி வழக்குகளும், 6 வழிப்பறி வழக்குகளும், 7 கொலை வழக்குகளும், வினோத்குமார் மீது 2 கார் திருட்டு வழக்குகளும் நிலுவையில் உள்ளது. மேலும் 3 பேருக்கும் மாத்தூர் பகுதியை சேர்ந்த புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. இளை ஞரணி துணைஅமைப்பாளர் பாலச்சந்தர், வாடகைக்கு வீடு எடுத்து கொடுத்தது உள்பட பல்வேறு உதவிகளை செய்ததும், போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து செல்வக்குமார், சுந்தரபாண்டி, வினோத்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 32 பவுன் நகைகள் மற்றும் ரூ.44 ஆயிரம், 2 கார்கள், 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களை போலீசார் மீட்டனர். கைது செய்யப்பட்ட 3 பேரையும் கீரனூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். மேலும் மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் பாலச்சந்தர் மீது மண்டையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.