இன்றுடன் விடைபெறும் சந்திரசூட்.. தன்பாலின உறவு முதல் தேர்தல் பத்திரம் வரை.. தீர்ப்புகளும் சர்ச்சைகளும்
- உச்சநீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக நீதிபதி சஞ்சீவ் கண்ணா பதவியேற்க உள்ளார்.
- தன்பாலின சேர்க்கை சட்டப்படி குற்றம் என்று இந்தியத் தண்டனை சட்டம் - பிரிவு 377 ரத்து செய்யப்பட்டது.
இந்திய உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வரும் நவம்பர் 11 ஆம் தேதி 65 வயதை எட்ட உள்ளார். அவரின் பதவிக்காலம் நாளை மறுநாள் [ நவம்பர் 10] முடிவடைய உள்ளது. இன்று [ நவம்பர் 8] சந்திரசூட்டின் கடைசி பணிநாள் ஆகும். தொடர்ந்து வரும் நவம்பர் 11 ஆம் தேதி திங்கள்கிழமை உச்சநீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக நீதிபதி சஞ்சீவ் கண்ணா பதவியேற்க உள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் 50 வது தலைமை நீதிபதியாக கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் பணியாற்றி வரும் டி.ஒய்.சந்திரசூட் இதற்கு முந்தைய நீதிபதிகளை விட பொதுவெளியில் அதிகம் பேசப்பட்டவர் ஆவார். சந்திரசூட்டின் தந்தையும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர் ஆவார். இந்திய நீதித்துறை வரலாற்றில் தந்தை - மகன் தலைமை நீதிபதிகளாக இருந்தது இதுவே முதல் முறை ஆகும். தலைமை நீதிபதியாக இருந்தபோதும் அதற்கு முந்தைய காலகட்டத்திலும் பல்வேறு முக்கிய தீர்ப்புகளில் சந்திரசூட் அங்கம் வகித்துள்ளார்.
ஆகஸ்ட் 2018 - தன்பாலின சேர்க்கை சட்டப்படி குற்றம் என்று இந்தியத் தண்டனை சட்டத்தின் 377வது பிரிவு சந்திரசூட் அடங்கிய அமர்வில் ரத்து செய்யப்பட்டது. ஆணோ பெண்ணோ தங்களுக்கு விருப்பமான துணையை தேர்ந்தெடுப்பதில் அரசோ பெற்றோரோ தலையிட முடியாது என்று தீர்ப்பு கூறியது.
செப்டம்பர் 2018 - திருமணத்தை மீறிய உறவு குற்றம் கிடையாது என்று தீர்ப்பு சந்திரசூட் அடங்கி அமர்வில் வழங்கிய தீர்ப்பு குடிமக்களின் தனியுரிமை சார்ந்த முக்கிய தீர்ப்பாக பார்க்கப்பட்டது.
செப்டம்பர் 2018 - 10-50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் சபரிமலைக்குச் செல்லக்கூடாது என்ற தடை ரத்து செய்யப்பட்டது
நவம்பர் 2019 - அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பகுதியில் ராமர் கோவில் கட்ட அனுமதி உள்ளிட்ட தீர்ப்புகளில் சந்திரசூட் அங்கம் வகித்தார்.
மேலும் 2022 ஆம் ஆண்டில் தலைமை நீதிபதியாக பதவியேற்ற பின்னர், கடந்த பிப்ரவரியில் நடந்த வழக்கில் , கடும் சர்ச்சைக்கு மத்தியில் பாஜக அரசு கொண்டுவந்த தேர்தல் பத்திர நடைமுறை சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்தார். முன்னதாக கடந்த 2023 மே மாதம் நடந்த வழக்கில், டெல்லியில் துணை நிலை ஆளுநரை விட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிக அதிகாரம் என்ற தீர்ப்பை வழங்கினார். இதுதவிர்த்து, பொது நலனுக்காகவே இருந்தாலும் அனைத்து தனியார் சொத்துக்களையும் அரசு கையகப்படுத்த முடியாது என்று இந்த மாதம் நடந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார்.
இதுபோன்ற தீர்ப்புகளுக்கு மத்தியில் சமீப காலமாக சந்திரசூட்டின் நடவடிக்கைகள் அரசியல் சார்ந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வருடம் விநாயகர் சதுர்த்தியின்போது சந்திரசூட் வீட்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றது தலைமை நீதிபதி பதவியின்மீதான நம்பகத்தன்மையைக் குலைப்பதாக விமர்சிக்கப்பட்டது.
மேலும் கடவுளிடம் பிரார்த்தனை செய்து அவர் காட்டிய வழியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில ராமர் கோவில் கட்ட தீர்ப்பு வழங்கியதாக சந்திரசூட் பேசியது நீதித்துறையின் நடுநிலைமையை சீர்குலைப்பதாக அமைந்தது என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டது.