ஆதாரமற்ற புகார்களை கூறியவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்- நாராயணசாமி உறுதி
புதுச்சேரி:
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையின் வருமானத்தை பெருக்க மதுக்கடைகளை திறக்க அமைச்சரவையில் முடிவு செய்து கோப்பு அனுப்பினோம். கவர்னர் கிரண்பேடி தமிழகத்தில் உள்ளதை போல மது விற்க வேண்டும் என உத்தர விட்டார். இதனால் மறுபரிசீலனை செய்து கோப்பு அனுப்பினோம். இன்னும் அந்த பிரச்சினை தீராத நிலையில் உள்ளது. அதற்கு ஒரு முடிவினை அரசு எடுக்கும்.
வெகுவிரைவில் மதுக்கடைகள் திறக்கப்படும். சென்னை ஐகோர்ட்டில் காரைக்காலை சேர்ந்த ஒருவர் புதுவையில் உரிமம் ரத்தானால் மதுக்கடைகளை திறக்கக்கூடாது எனவும், என் மீதும் தனிப்பட்ட குற்றச்சாட்டை கூறி மனு தாக்கல் செய்திருந்தார். மனு விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள், மதுக் கடை திறப்பது அரசின் கொள்கை முடிவு. சி.பி.ஐ. விசாரணைக்கும், மதுக்கடைக்கும் சம்பந்தம் கிடையாது.
தற்காலிக உரிமம் ரத்து செய்யப்பட்ட மதுக் கடைகளை திறக்கக்கூடாது. ஆனால் கலால்துறை விதிப்படி எந்த நடவடிக்கை எடுக்கவும் கலால்துறைக்கு அதிகாரம் உண்டு என்று கூறியுள்ளனர்.
மேலும் என்மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர். நீதிமன்ற உத்தரவு வந்த பிறகு என் மீது ஆதாரமற்ற புகார்களை கூறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டேன். வெளி நாட்டில் இருந்து வருபவர்களின் விபரங்களை மத்திய அரசு தருவதில்லை. இதுகுறித்து மத்திய அரசு, தமிழக அரசு மற்றும் சென்னை விமான நிலையத்திற்கு கடிதம் எழுதி விபரம் கேட்க கலெக்டருக்கு உத்தர விடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.