செய்திகள்
ஊட்டியில் சவாரி கிடைக்காமல் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாடகை வாகனங்கள்

சுற்றுலா பயணிகள் வருகை குறைவு- சவாரி கிடைக்காமல் தவிக்கும் வாடகை வாகன ஓட்டிகள்

Published On 2020-10-03 10:19 GMT   |   Update On 2020-10-03 10:19 GMT
ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து உள்ளதால், சவாரி கிடைக்காமல் வாடகை வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா பயணிகள் வர இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அதுவும் ஒரு நாளைக்கு 150 பேருக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது. இது தவிர தோட்டக்கலை பூங்காக்கள் மட்டுமே திறக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக ஊட்டியில் படகு இல்லம், தொட்டபெட்டா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் திறக்கப்படவில்லை. இதனால் வார விடுமுறை நாட்களை தவிர பிற நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைவாகவே உள்ளது.

இதனால் அவர்களை நம்பி பிழைப்பு நடத்தி வரும் வாடகை வாகன ஓட்டிகள் வாழ்வாதாரம் இழந்து உள்ளனர். சுற்றுலா பயணிகளை ஏற்றிச்செல்வதன் மூலம் கிடைக்கும் வாடகை பணத்தை அவர்கள் தங்களது குடும்பங்களை நடத்தி வருகிறார்கள். ஆனால் குறைந்த எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் வருவதால் சவாரி கிடைக்காமல் வாகனங்களை வாடகைக்கு இயக்க முடியவில்லை.

இதனால் காபி ஹவுஸ், லோயர் பஜார் உள்ளிட்ட சாலையோரங்களில் வாடகை வாகனங்கள் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. வெளிமாவட்டங்களில் இருந்து ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் தங்களது சொந்த வாகனங்களில் வருவதால் சவாரி கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

இதற்கிடையே அவர்கள் வாகனங்களை வாங்க தனியார் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று உள்ளனர். தற்போது வருமானம் இல்லாத நிலையில் கடனை செலுத்தக்கோரி தனியார் நிதி நிறுவனத்தினர் அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிகிறது. இதனால் வாடகை வாகன ஓட்டிகள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

இதுகுறித்து ஊட்டி சுற்றுலா கார், சுமோ, மேக்சிகேப் ஓட்டுனர் நலச்சங்க தலைவர் கோவர்த்தன் கூறியதாவது:-

ஊரடங்கு தொடர்ந்து வரும் நிலையில், வாடகை வாகன ஓட்டிகளுக்கு அரசு நிவாரண உதவி வழங்கவில்லை. ஒவ்வொரு நாளும் குடும்ப செலவுக்கு பணமின்றி தவித்து வருகிறோம். வாகனங்களே இயக்கப்படாத நிலையில், சாலை வரி கட்ட வற்புறுத்தப்படுகிறோம். மேலும் கடன் கொடுத்த தனியார் நிதி நிறுவனத்தினர் உடனடியாக திரும்ப கட்ட சொல்லி கட்டாயப்படுத்துகின்றனர். அவர்களிடம் கடனை திரும்ப செலுத்த கால அவகாசம் வாங்கி தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News