செய்திகள்
முக ஸ்டாலின்

இட ஒதுக்கீடு வழங்காவிட்டால் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அறிவிக்க வேண்டும்- முதலமைச்சருக்கு முக ஸ்டாலின் வலியுறுத்தல்

Published On 2020-10-27 02:16 GMT   |   Update On 2020-10-27 02:16 GMT
இந்த ஆண்டு இட ஒதுக்கீடு வழங்காவிட்டால் பா.ஜ.க.வுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று எடப்பாடி பழனிசாமி அறிவிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அகில இந்தியத் தொகுப்பிற்கு மாநிலங்களில் இருந்து ஒதுக்கப்பட்ட மருத்துவக் கல்விக்கான இடங்களில், இந்த கல்வி ஆண்டே 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பு பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மாணவர்களுக்கு மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது. பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மக்களுக்கு இந்த ஆண்டு இடஒதுக்கீடு கொடுக்க முடியாது என்று எழுத்துபூர்வமாக மத்திய பா.ஜ.க. அரசு எடுத்து வைத்த வாதத்தாலும், இந்த ஆண்டே இடஒதுக்கீடு கொடுங்கள் என்று ஐகோர்ட்டின் தீர்ப்பின்படி அமைக்கப்பட்ட நால்வர் குழுவில் அ.தி.மு.க. அரசு துணிச்சலுடன் வாதிடாமல் போனதாலும் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு இந்த பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டே இடஒதுக்கீடு கிடைத்து விடும் என்று நினைத்த பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மாணவர்களின் மருத்துவக் கனவை மத்திய பா.ஜ.க. அரசும் அ.தி.மு.க. அரசும் கைகோர்த்து கூட்டணி வைத்து இன்றைய தினம் திட்டமிட்டுக் கலைத்திருக்கிறது. 3 ஆண்டுகளுக்கு மேலாக மாநில அரசின் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்க வேண்டிய 50 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கவில்லை. பட்டியலின மாணவர்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கவில்லை. மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இடஒதுக்கீட்டையும் அளிக்கவில்லை. இதனால் தமிழகத்திலும் அகில இந்தியாவிலும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிற்படுத்தப்பட்ட பட்டியலின மாணவர்களின் இடஒதுக்கீட்டு உரிமை பாதிக்கப்பட்டுள்ளது.

ஆகவே தி.மு.க. ஏற்கனவே வலியுறுத்தியது போல் அகில இந்தியத் தொகுப்புக்கு ஒதுக்கப்பட்ட மருத்துவக் கல்வியிடங்களில் இந்த ஆண்டே 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடியை கேட்டுக் கொள்கிறேன். பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர் இடஒதுக்கீட்டில் காட்டிய அவசரத்தைப் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்காகவும் பட்டியலின சமூகத்திற்காகவும் பிரதமர் காட்ட வேண்டும் என்று நாடு எதிர்பார்க்கிறது; பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமுதாயம் ஆவலுடன் எதிர்பார்க்கிறது.

ஐகோர்ட்டு அறிவுறுத்தலின்படி அமைக்கப்பட்ட கமிட்டி கூட்டத்திற்காகக் காத்திராமல் ஏற்கனவே இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குச் சட்ட உரிமையாக உள்ள 27 சதவீத இடஒதுக்கீட்டை இந்த ஆண்டே செயல்படுத்தி பிறகு கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் 50 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்குப் பிரதமர் உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

எல்லாவற்றிலுமே இரட்டை வேடம் போடாமல் சமூகநீதியைக் காப்பதிலும் கண்துடைப்பு நாடகம் நடத்தாமல் மருத்துவக் கல்விக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் இந்த ஆண்டே இடஒதுக்கீட்டைப் பெறுவதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரிய அழுத்தத்தை அரசியல் ரீதியாக பிரதமருக்கு கொடுக்க வேண்டும். இந்த ஆண்டு இடஒதுக்கீடு வழங்காவிட்டால் பா.ஜ.க.வுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News