செய்திகள்
கலெக்டர் இன்னசென்ட் திவ்யா

கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்- கலெக்டரிடம் கோரிக்கை

Published On 2020-12-11 04:15 GMT   |   Update On 2020-12-11 04:15 GMT
கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
ஊட்டி:

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:- தமிழகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் பணிபுரிந்து வரும் கிராம உதவியாளர்கள் கொரோனா காலத்தில் மனித உயிர்களை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் அரசு எடுத்த நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த தனது உயிரையும் பொருட்படுத்தாமல் பணிபுரிந்த உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

பொங்கல் போனஸ் டி பிரிவு ஊழியர்களுக்கு வழங்குவது போல நாட்கள் கணக்கில் வழங்க வேண்டும். ஜமாபந்தி காலத்தில் பணிபுரியும் கிராம உதவியாளர்களுக்கு அதற்கான படி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வெள்ளம், புயல், கொரோனா போன்ற இயற்கை இடர்பாடு பணிகளுக்கு இயற்கை இடர்பாடு சிறப்பு படி வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வு 20 சதவீதம் என்பதை 30 சதவீதமாக உயர்த்தியும், பணி மூப்பு 10 ஆண்டுகள் என்பதை 6 ஆண்டுகளாக குறைத்தும் உத்தரவிட வேண்டும். 1.1.2003-ந் தேதிக்கு பின்னர் பணிக்கு வந்த அனைத்து கிராம உதவியாளர்களுக்கு பழைய முறையிலான ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

வருவாய் தாசில்தார்களால் கிராம உதவியாளர்கள் பணி நியமனம் செய்யும் நடைமுறையை அகற்றிவிட்டு, டி.என்.பி.எஸ்.சி. மூலம் கிராம உதவியாளர்களை பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் பணிபுரியும் கிராம உதவியாளர்கள் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு 20 சதவீதம் பதவி உயர்வு முழுமையாக கிடைக்க அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் வழிகாட்ட வேண்டும். வருவாய்த்துறையில் கிராம உதவியாளர் நிலையில் இருந்து கிராம நிர்வாக அலுவலராக பதவி உயர்வு வழங்கும் போது, பிறந்த தேதியை கணக்கில் கொண்டு வழங்கும் நிலை உள்ளது. இதை மாற்றி கிராம உதவியாளர்கள் பணியில் சேர்ந்த தேதியை கணக்கில் கொண்டு முன்னுரிமை பட்டியல் தயார் செய்து கிராம நிர்வாக அலுவலராக பதவி உயர்வு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News