செய்திகள்
கோவில் நிலத்தை பார் ஆக மாற்றி வரும் மதுபிரியர்கள்
கோவில் நிலம் குடிமகன்களின் “பார்” ஆக மாறி மரக்கன்றுகள் நடுவதற்காக தோண்டப்பட்ட குழிகளில் மது பாட்டில்கள் கிடைக்கின்றன.
பல்லடம்:
நொச்சிபாளையத்தில் கோவில் நிலத்திற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி, நொச்சிபாளையம் பகுதியில் பழமை வாய்ந்த கருப்பராயன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமாக 8.99 ஏக்கர் நிலம் இருக்கிறது. இந்த விவசாய நிலத்தில் ஊர் கட்டுப்பாடு குத்தகை அடிப்படையில் விவசாயம் செய்து வந்தோம்.
பின்னர் கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சென்றது. அதன்பிறகும் விவசாயம் செய்து கோவிலுக்கு குத்தகை செலுத்தினோம். கடந்த ஆண்டு கோவில் நிலத்தில் 5 ஏக்கர் நிலம் திருப்பூர் கமிஷனர் அலுவலகம் கட்டுவதற்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக அறநிலையத் துறையினர் கூறினர்.
இதனால் கோவில் நிலத்தை சுற்றி இருந்த கம்பி வேலிகள் அகற்றப்பட்டது. வளாகத்தை சுற்றி மரக்கன்றுகள் நடுவதற்காக குழிகளும் தோண்டப்பட்டது. இந்த நிலையில் கம்பி வேலிகள் அகற்றப்பட்டதால் அந்த நிலத்தில் சட்டவிரோத செயல்கள் நடைபெறுகின்றன.
கோவில் நிலம் குடிமகன்களின் "பார்" ஆக மாறிவிட்டது. மரக்கன்றுகள் நடுவதற்காக தோண்டப்பட்ட குழிகளில் மது பாட்டில்கள் கிடைக்கின்றன. கண்ணெதிரே கோவில் நிலம் சீரழிவதை கண்டு வேதனையாக உள்ளது.
எனவே அரசு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கோவில் நிலத்தை பாதுகாக்க வேண்டும். இல்லையென்றால் பொதுமக்கள் ஒன்று கூடி போராட தயாராக உள்ளோம் என்றனர்.