செய்திகள்
நடுரோட்டில் கவிழ்ந்து கிடக்கும் கார்

கல்லூரி மாணவிகளுடன் மின்னல் வேகத்தில் சென்ற கார் கவிழ்ந்து விபத்து- 4 பேர் உயிர் தப்பினர்

Published On 2021-11-03 10:10 GMT   |   Update On 2021-11-03 10:10 GMT
சாந்தோமில் விபத்து நடந்த நேரத்தில் சாலையில் யாரும் இல்லாததால் பெரிய அளவில் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது.
சென்னை:

தி.நகரில் இருந்து நேற்று நள்ளிரவு 1 மணியளவில் பழைய மகாபலிபுரம் சாலை செல்வதற்காக 4 பேர் காரில் புறப்பட்டனர்.

ஸ்ரீகாந்த் என்ற இளைஞர் காரை ஓட்டிச் சென்றார். காரில் மதுகிருஷ்ணன் என்ற வாலிபரும், 2 கல்லூரி மாணவிகளும் இருந்தனர்.

நேற்று நள்ளிரவு 1 மணியளவில் சாந்தோம் நெடுஞ்சாலை வழியாக கார் சென்று கொண்டிருந்தது. குயில் தோப்பு பகுதியில் பள்ளிக்கூடம் அருகில் திரும்பும் போது காரை ஓட்டிச்சென்ற ஸ்ரீகாந்தின் கட்டுப்பாட்டை இழந்து கார் மின்னல் வேகத்தில் சென்று தலைக்குப்புற கவிழ்ந்தது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த திருவல்லிக்கேணி போக்குவரத்து உதவி கமி‌ஷனர் ரவிச்சந்திரன், வேப்பேரி போக்குவரத்து இன்ஸ்பெக்டர், பாண்டிவேலு, அடையாறு சப்-இன்ஸ்பெக்டர் போஸ் முத்தையா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் நடுரோட்டில் கவிழ்ந்து கிடந்த காரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவியோடு தூக்கி நிறுத்தினார்கள். பின்னர் காரில் இருந்தவர்கள் வெளியில் பத்திரமாக மீட்கப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை.

கல்லூரி மாணவி ஒருவருக்கு மட்டும் காயம் ஏற்பட்டு இருந்தது. அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

பின்னர் போக்குவரத்து போலீசார், காரை ஓட்டி வந்த ஸ்ரீகாந்தை பரிசோதித்தனர். அப்போது அவர் மது அருந்தி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். சினிமாவில் வருவது போன்று நள்ளிரவு நடந்த இந்த விபத்து பரபரப்பை ஏற்படுத்தியது. விபத்து நடந்த நேரத்தில் சாலையில் யாரும் இல்லாததால் பெரிய அளவில் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News