ராமேஸ்வரத்தில் 60 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று: ஆக்ரோஷமாக எழும் ராட்சத அலைகள்
- காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறுகிறது.
- அக்னிதீர்த்தக்கடல் பகுதியில் கடல் நீர்மட்டம் உயர்ந்தது.
மண்டபம்:
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறுகிறது. வட கிழக்கு பருவ மழையுடன் புயலும் சேர்ந்ததால் தமிழகம் முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.
குறிப்பாக கடலோர மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த வாரம் மேக வெடிப்பு காரணமாக ஒரே நாளில் 44 செ.மீ. மழை பதிவானது.
ராமேசுவரத்தை புரட்டிப்போட்ட இந்த மழை பாதிப்பில் இருந்து மக்கள் சற்று மீண்டு வந்த நிலையில், புயல் சின்னம் காரணமாக நேற்று முதல் மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது.
வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை எதிரொலியாக பாக்ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் மீன்பிடி இறங்குதளங்களில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகள் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன.
கடுமையான பனி மூட்டத்துடன் பலத்த மழையும் பெய்து வருவதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வீடுகளுக்குள் முடங்கினர். சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து வெறிச்சோடியது.
அரிச்சல் முனை, தனுஷ்கோடி, முகுந்தராயர்சத்திரம், கோதண்டராமர் கோவில், ராமர்பாதம், பாம்பன் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை காரணமாக சுற்றுலாப் பயணிகள் வருகை வெகுவாக குறைந்தது.
குந்துகால் முதல் குரு சடைதீவு வரையில் இயக்கப்படும் சுற்றுலா படகு போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. அக்னிதீர்த்தக்கடல் பகுதியில் கடல் நீர்மட்டம் உயர்ந்தது.
தனுஷ்கோடி, குந்துகால் கடல் பகுதி, பாம்பன் ஆகிய இடங்களில் அலைகளின் சீற்றம் மிகவும் ஆக்ரோஷமாக காணப்பட்டது. அதிலும் பாம்பன் புதிய ரெயில் பாலத்தில் பல மீட்டர் உயரத்திற்கு ராட்சத அலைகள் எழுந்து தாக்கியது.
சேராங்கோட்டை கடற்கரை பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டதால் கரையில் நிறுத்தப்பட்டிருந்த நாட்டுப் படகுகள் மீண்டும் கடலில் இழுக்கப்பட்டன. அத்துடன் கடற்கரையை ஒட்டிய மீனவர் குடியிருப்புகளையும் கடல் நீர் சூழ்ந்தது. இதனால் அங்கு வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
தமிழகத்தை நோக்கி வேகமாக நகர்ந்து வரும் புயலால் ராமேசுவரம் கடலில் இன்று மணிக்கு 55 முதல் 63 கி.மீ. வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசக் கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
அதற்கேற்க இன்று காலை முதலே பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் 60 கி.மீ. வேகத் தில் சூறாவளி காற்று வீசியது. தொடர்ந்து மழையும் பெய்து வருவதால் கடற்கரை வெறிச்சோடியது. நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் 54 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.