தமிழ்நாடு

மாணவரின் புத்தகத்தில் சாதி பெயரை எழுதிய ஆசிரியர் பணியிடை நீக்கம்

Published On 2024-11-27 06:18 GMT   |   Update On 2024-11-27 07:23 GMT
  • பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் ஒருவர் புத்தகத்தில் உள்ள இசைக்கருவிகள் குறித்து பாடம் நடத்தி உள்ளார்.
  • மாணவரின் சாதி பெயரை புத்தகத்தில் எழுதிய ஆசிரியரை பணி நீக்கம் செய்து, கைது செய்ய வேண்டும் என கோஷமிட்டனர்.

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் அருகே குனிச்சி மோட்டூர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் விஜயகுமார் புத்தகத்தில் உள்ள இசைக்கருவிகள் குறித்து பாடம் நடத்தி உள்ளார்.

அப்போது, குறிப்பிட்ட ஒரு இசைக்கருவியின் பெயரை குறிப்பிட்டு அந்த இசைக்கருவியை குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள் மட்டுமே வாசிப்பார்கள் எனக்கூறி ஒரு மாணவரின் பாடப்புத்தகத்தில், மாணவரின் சாதி பெயரை குறிப்பிட்டு எழுதி அனைத்து மாணவர்கள் முன்னிலையில் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த மாணவன் வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் கூறி அழுதான். இதையடுத்து, 2 நாட்கள் கழித்து ஊர் பொதுமக்கள் பள்ளிக்கு சென்று ஆசிரியரிடம் இதுதொடர்பாக கேட்டபோது, அவர் முறையான பதில் அளிக்கவில்லை எனக்கூறப்படுகிறது.

பின்னர் குனிச்சி மோட்டூர் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஒன்றிணைந்து நேற்று காலை பள்ளியை முற்றுகையிட்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மாணவரின் சாதி பெயரை புத்தகத்தில் எழுதிய ஆசிரியரை பணி நீக்கம் செய்து, கைது செய்ய வேண்டும் என கோஷமிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புண்ணியகோட்டி, திருப்பத்தூர் தாசில்தார் நவநீதம், கந்திலி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆசிரியர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் ஆசிரியர் விஜயகுமாரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுலவர் உத்தரவிட்டுள்ளார். விஜயகுமார் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News