பெண்ணுக்காக நடந்த மோதலில் டிராவல்ஸ் நிறுவன ஊழியர் கொலை
- தோழிகள் 3 பேரும் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் காரை வாடகைக்கு எடுத்துக் கொண்டு மதுரையில் இருந்து புறப்பட்டனர்.
- பெண்ணுக்காக உருவான தகராறு முற்றி கைகலப்பாக மாறியது.
அலங்காநல்லூர்:
மதுரை தல்லாகுளம் ஆசாரி தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜாகீர் உசேன் மகன் காதர் இஸ்மாயில் (வயது 29). இவர் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் முருகன், ராஜா உசேன் ஆகியோரும் வேலை பார்த்து வருகிறார்கள்.
இந்தநிலையில் காதர் இஸ்மாயிலின் நண்பரான சரவணக்குமார் என்பவர் ஜெய்ஹிந்த்புரம் பகுதியை சேர்ந்த சசிகலா (24) என்பவரை காதலித்து வருகிறார். நேற்று சசிகலாவுக்கு பிறந்த நாளாகும். இதனை கொண்டாடுவதற்காக அவரது தோழிகளான சிக்கந்தர்சாவடியை சேர்ந்த வினோதினி, அண்ணா நகரை சேர்ந்த பபிதா ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர்.
இதையடுத்து தோழிகள் 3 பேரும் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் காரை வாடகைக்கு எடுத்துக் கொண்டு மதுரையில் இருந்து புறப்பட்டனர். அந்த காரில் அவர்களுடன் பரவை பொற்கூடல் நகரை சேர்ந்த முருகன் (32), கே.புதூர் அல் அமீன் நகரை சேர்ந்த ராஜா உசேன் (24) ஆகியோரும் சென்றிருந்தனர். தனது காதலி பிறந்த நாளுக்கு முருகன், ராஜா உசேன் சென்றதை அறிந்த சரவணக்குமார் கடும் ஆத்திரம் அடைந்தார்.
இதற்கிடையே டிராவல்ஸ் நிறுவன ஊழியர்களான முருகன், ராஜா உசேன் ஆகிய இருவரும் சரவணகுமாரின் காதலியான சசிகலாவுடன் மதுரை-நத்தம் சாலையில் காஞ்சாரம் பேட்டை பகுதியில் உள்ள ஒரு சாலையோர உணவகத்திற்கு சென்றிருந்தனர். இதையடுத்து சரவணக்குமார் தனது நண்பர் காதர் இஸ்மாயிலை அழைத்துக் கொண்டு காதலி சென்றிருந்த ஓட்டலுக்கு சென்றுள்ளார்.
முன்னதாக டிராவல்ஸ் நிறுவன ஊழியர்களான முருகன், ராஜா உசேன் இருவரும் அளவுக்கு அதிகமான மது போதையில் இருந்ததோடு, சசிகலா மற்றும் அவரது தோழிகளுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த சரவணக்குமார், அவர்களை தட்டிக்கேட்டதோடு, என்னுடைய காதலியை நீ ஏன் காரில் அழைத்து வந்தாய் என்று கேட்டு வாக்கு வாதம் செய்தார். அவருக்கு ஆதரவாக காதர் இஸ்மாயிலும் முருகனை தட்டிக் கேட்டார்.
இந்தநிலையில் உணவகத்தை பூட்ட வேண்டும் என்று கூறிய அதன் நிர்வாகத்தினர் தகராறில் ஈடுபட்டவர்களை வெளியே செல்லுமாறு கூறினர். அதே சமயம் பெண்ணுக்காக உருவான தகராறு முற்றி கைகலப்பாக மாறியது. அப்போது ஒருவரையொருர் மாறி மாறி தாக்கிக்கொண்டனர். இதில் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற முருகன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காதர் இஸ்மாயிலை சரமாரியாக குத்தினார்.
தடுக்க சென்ற சரவணக்குமாருக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதில் அவர்கள் இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அவர்களை மீட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் வழியிலேயே காதர் இஸ்மாயில் பரிதாபமாக இறந்தார். சரவணக்குமார் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து சத்திரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெண்ணுக்காக நடந்த மோதலில் டிராவல்ஸ் நிறுவன ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.