தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரி மதுபானத்தை தரையில் கொட்டி போராட்டம்- கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
- தமிழகத்தில் தற்போது போதைப்பொருள் கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது.
- நாளடைவில் இவர்கள் சமூகவிரோதிகளாக மாறுகின்ற அபாய சூழல் உள்ளது.
திருப்பூர்:
இந்து மக்கள் எழுச்சி பேரவை, இந்து மக்கள் புரட்சி படை, இந்துஸ்தான் மக்கள் சேவை இயக்கம் சார்பில் அதன் நிர்வாகிகள் இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மது பாட்டில்களுடன் வந்து மதுவை தரையில் கொட்டி போராட்டம் நடத்தினர். பின்னர் கலெக்டரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் தற்போது போதைப்பொருள் கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இளம் வயது சிறுவர்கள் முதல் வயதாகிய முதியவர்கள் வரை மதுவின் கோரப்பிடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி கூலித் தொழிலாளர்கள் தங்களின் அன்றாட வருமானத்தை மதுகுடிக்கும் பழக்கத்திற்கே செலவு செய்யும் வண்ணம் உள்ளனர்.
நாளடைவில் இவர்கள் சமூகவிரோதிகளாக மாறுகின்ற அபாய சூழல் உள்ளது. மது அருந்தி வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகளால் தினசரி விபத்துகளும் அதனால் பல உயிர் இழப்புகளும் ஏற்படுகின்றது. இதனால் மது குடிப்பவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். ஆகவே மாநில அரசு மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்தி தமிழக முழுவதும் உடனடியாக பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.