மயில்களுக்கு சரணாலயம் அமைக்க கோரிக்கை
- தேசிய பறவை மயிலுக்கு சரணாலயம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசுக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரைக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விவசாயிகள் எலிகளுக்காக வைக்கும் மருந்துகளை உண்ணும் மயில்கள் உயிரிழக்கின்றன.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் மயில்களுக்கு சரணாலயம் அமைக்கவேண்டும் என பா.ஜ.க, வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் விவசாய அணி மாநில திட்ட பொறுப்பாளர் அண்ணாதுரை கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- அவிநாசி, பல்லடம், காங்கயம், தாராபுரம், உடுமலை பகுதி விவசாய பூமிகளில் மயில்கள் புகுந்து விதைகளையும், தானியங்களையும் சேதப்படுத்துகின்றன.
மயில்களின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளது. விவசாயிகள் எலிகளுக்காக வைக்கும் மருந்துகளை உண்ணும் மயில்கள் உயிரிழக்கின்றன. விஷம் வைத்தும் மயில்கள் கொல்லப்படுகின்றன.
வாகனங்கள் மோதி உயிரிழக்கின்றன. மயில்களை கொன்று அதன் இறகுகளை விற்பனை செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கால்நடை மருத்துவர்கள், வனத்துறையினர் போதிய எண்ணிக்கையில் இல்லாததால் மயில்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மயில்களை கணக்கெடுக்கவேண்டும். தேசிய பறவை மயிலுக்கு சரணாலயம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசுக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரைக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.