தொழில் போட்டியில் தண்ணீர் வியாபாரியை தாக்கி நகை பறிப்பு
- தொழில்போட்டி காரணமாக வியாபாரியை சரமாரியாக தாக்கி அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை ஒரு கும்பல் பறித்துக் கொண்டு தப்பி ஓடினர்.
- புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே காக்காத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 43). இவர் மினி வாகனம் மூலம் தண்ணீர் சப்ளை செய்து வருகிறார். வேடசந்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தண்ணீர் விநியோகம் செய்து வருகிறார். இவருக்கும் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த தண்ணீர் நிறுவனத்திற்கும் இடையே தொழிற் போட்டி காரணமாக முன் விரோதம் இருந்து வருகிறது.
இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் ஜெயராமன் தண்ணீர் வண்டியுடன் லைனுக்கு சென்றார். கேதையறும்பு அருகே சென்று கொண்டிருந்த போது ஒரு கும்பல் அவரை வழிமறித்து எங்கள் பகுதியில் தண்ணீர் சப்ளை செய்வதை நிறுத்த வேண்டும் என்று கூறி தகராறில் ஈடுபட்டனர். மேலும் ஜெயராமனை சரமாரியாக தாக்கி அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர்.
இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கூடினர். இதனையடுத்து காயமடைந்த ஜெயராமனை ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.