தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவில் ஆடித்திருவிழாவில் தெப்ப உற்சவம்
- திண்டுக்கல் அருகில் உள்ள தாடிக்கொம்பு சவுந்தரராஜபெருமாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி பெருந்திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்படும்.
- ஸ்ரீதேவி, பூதேவி சமேத சவுந்தரராஜ பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
தாடிக்கொம்பு:
திண்டுக்கல் அருகில் உள்ள தாடிக்ெகாம்பு சவுந்தரராஜபெருமாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி பெருந்திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்படும். இவ்வாண்டுக்கான திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக இரவு 7.30 மணிக்கு மேல் அங்குரார்ப்பணம், வாஸ்துசாந்தி பூஜைகள் நடைபெற்றது.
அதன்பிறகு காலை 7.30 மணியிலிருந்து 9 மணிக்குள் கொடியேற்றமும், சூரியபிரபை, சந்திரபிரபை வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதன்பின் மாலை 6 மணிக்கு அன்னவாகனத்திலும், 6-ந்தேதி சிம்ம வாகனத்திலும், 7-ந்தேதி கருட வாகனத்திலும், 8-ந்தேதி சேஷவாகனத்திலும், 9-ந்தேதி யானை வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தார்.
10-ந்தேதி ஆடிபிரமோற்சவத்தை முன்னிட்டு சவுந்தரராஜபெருமாள், சவுந்திரவள்ளி தாயார் மற்றும் ஆண்டாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. அதன்பின் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சவுந்தரராஜபெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இரவு மணக்கோலத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளி வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன்பின் நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் ஆடித்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதன்பின் இரவில் அவரோகணம் நிகழ்ச்சியும், நேற்று காலை தீர்த்தவாரியும் நடைபெற்றன. திருவிழாவின் நிறைவுநாள் நிகழ்ச்சியாக நேற்று இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது.
ஸ்ரீதேவி, பூதேவி சமேத சவுந்தரராஜ பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.