பட்டரைவாக்கம் மேம்பாலத்தில் விபத்து: சரக்குவேன் உடைந்து கொரட்டூர் ஏரிக்குள் விழுந்தது
- கார் திடீரென சரக்கு வேன் மீது பயங்கரமாக மோதியது.
- சரக்குவேனின் பின்பகுதி தனியாக உடைந்து கொரட்டூர் ஏரிக்குள் விழுந்தது.
அம்பத்தூர்:
அம்பத்தூர் பகுதியில் இருந்து கோயம்பேடு நோக்கி இன்று அதிகாலை சரக்கு வேன் ஒன்று வந்து கொண்டு இருந்தது. டிரைவர் பாலகிருஷ்ணன் வண்டியை ஓட்டினார். பட்டரைவாக்கம் மேம்பாலத்தில் வந்த போது எதிரே வந்த கார் திடீரென சரக்கு வேன் மீது பயங்கரமாக மோதியது.
கார் மோதிய வேகத்தில் சரக்குவேனின் பின்பகுதி தனியாக உடைந்து சுமார் 50 அடி உயர மேம்பாலத்தில் இருந்து கீழே உள்ள கொரட்டூர் ஏரிக்குள் விழுந்தது.
இந்த விபத்தில் காரை ஓட்டிவந்த நபருக்கும், சரக்கு வேன் டிரைவர் பாலகிருஷ்ணனுக்கும் காயம் ஏற்பட்டது. உடனே அவர்கள் விபத்தில் சிக்கிய வாகனங்களை அங்கேயே நிறுத்திவிட்டு போலீசுக்கு தெரிவிக்காமல் அங்கிருந்து சென்று விட்டதாக தெரிகிறது.
இதற்கடையே கொரட்டூர் ஏரிக்குள் சரக்கு வாகனத்தில் பின்பகுதி மிதப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் கொரட்டூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஏரிக்குள் விழுந்து கிடந்த வாகனத்தின் பாகத்தை மீட்டனர்.
கார் மோதிய விபத்தில் சரக்குவேனின் பின்பகுதி மட்டும் கழன்று ஏரிக்குள் விழுந்ததால் முன்பகுதியில் இருந்த டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். காரின் பதிவு எண்ணை வைத்து அதனை ஓட்டிவந்தவர் பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.