உள்ளூர் செய்திகள்
ஆசிட் வீச்சில் காயம் அடைந்த கவிதா.

கோர்ட்டில் ஆசிட் வீச்சு- படுகாயம் அடைந்த இளம்பெண் கவலைக்கிடம்

Published On 2023-03-24 09:26 GMT   |   Update On 2023-03-24 09:26 GMT
  • கவிதா திருட்டு வழக்கு தொடர்பாக ஆஜராவதற்காக நேற்று கோவை கோர்ட்டிற்கு வந்தார்.
  • ஆசிட் வீசியதில் கவிதாவின் கழுத்துக்கு கீழ் அனைத்து பகுதியிலும் பலத்த காயம் ஏற்பட்டது.

கோவை:

கோவை சூலூர் கண்ணம்பாளையம் பிரிவை சேர்ந்தவர் சிவா (வயது40). லாரி டிரைவர். இவருக்கு கவிதா(35) என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

கடந்த 2016-ம் ஆண்டு கவிதா மீது ஆர்.எஸ்புரம் போலீசில் 2 திருட்டு வழக்குகள் பதிவானது. இது தொடர்பாக போலீசார் அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

பின்னர் வெளியில் வந்த அவருக்கு வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதனை அறிந்த கவிதாவின் கணவர் மனைவியை கண்டித்தார். இதன் காரணமாக கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கவிதா குழந்தைகள் மற்றும் கணவரை தவிக்க விட்டு விட்டு பிரிந்து சென்று விட்டார். அவரை சிவா தேடி வந்தார்.

இதற்கிடையே கவிதா திருட்டு வழக்கு தொடர்பாக ஆஜராவதற்காக நேற்று கோவை கோர்ட்டிற்கு வந்தார். இதனை அறிந்ததும் சிவா தனது பெற்றோர், குழந்தைகளுடன் கோர்ட்டிற்கு வந்தார்.

அங்கு நின்ற தனது மனைவியிடம் நீ இல்லாமல் நமது குழந்தைகள் மிகவும் கஷ்டப்படுகிறது. நீ எங்களுடன் வந்துவிடு சந்தோஷமாக வாழலாம் என தெரிவித்தார். ஆனால் அவர் வருவதற்கு மறுப்பு தெரிவித்தார்.

இதனால் 2 பேருக்கும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கவிதா முதலாவது தளத்தில் உள்ள நீதிமன்றத்திற்கு சென்றார்.

அப்போது அவரை பின் தொடர்ந்து சென்ற சிவா, தான் பாட்டிலில் மறைத்து எடுத்து வந்த ஆசிட்டை கவிதா மீது ஊற்றினார். பின்னர் அங்கிருந்து தப்பியோட முயன்றார். அவரை வக்கீல்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆசிட் வீசியதில் கவிதாவின் கழுத்துக்கு கீழ் அனைத்து பகுதியிலும் பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். ஆசிட் வீசியதில் அவர் 80 முதல் 85 சதவீத தீக்காயம் அடைந்துள்ளது. அவருக்கு டாக்டர்கள் இன்று 2-வது நாளாக தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இருந்த போதிலும் அவரது நிலைமை கவலைக்கிடமாகவே உள்ளது. அவரை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இதுகுறித்து டாக்டர்கள் கூறும் போது, ஆசிட் வீசியதில் கவிதாவுக்கு 80 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளோம். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறோம்.

ஆசிட் என்பதால் அவரது உடல் முழுவதும் அரித்துள்ளது. இதுவரை 80 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டவர்கள் யாரும் உயிர் பிழைத்தது இல்லை. இருப்பினும் அவரது உயிரை காப்பாற்ற போராடி வருகிறோம். இருந்தபோதிலும் தற்போது வரை அவர் கவலைக்கிடமான நிலையிலேயே உள்ளார். தொடர்ந்து அவரை தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்து காப்பாற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News