தடையை மீறி இறைச்சி விற்ற கடைகள் மீது நடவடிக்கை - 100 கிலோ பறிமுதல் செய்து அழிப்பு
- சிக்கன் மட்டன் உள்ளிட்ட இறைச்சி கடைகளையும் மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
- கடை உரிமையாளர்களை கடைகளை உடனடியாக மூடுமாறு அதிகாரிகள் எச்சரித்தனர்.
திருப்பூர் :
வடலூர் ராமலிங்கர் நினைவுதினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள், அவற்றுடன் செயல்படும் மதுபான கூடங்கள், மனமகிழ் மன்றங்கள் மற்றும் உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற மதுபான கூடங்கள் மூடப்படும் என்றும், மதுபானங்கள் விற்பனை செய்வதை நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும் தவறும்பட்சத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் உத்தரவிட்டிருந்தார்.
மேலும் சிக்கன் மட்டன் உள்ளிட்ட இறைச்சி கடைகளையும் மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அரசு உத்தரவை மீறி நேற்று திருப்பூர் மாநகராட்சி 4 மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் இறைச்சி விற்பனை நடைபெறுவதாக தகவல் வந்தது. இதன் பேரில் மாநகராட்சி முழுவதும் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதன்படி 2-வது மண்டலத்திற்கு ட்பட்ட பி.என். ரோடு, கொங்கு மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 2-வது மண்டல சுகாதார அலுவலர் பிச்சை, சுகாதார ஆய்வாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அங்குள்ள கடைகளில் இறைச்சி விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அந்தக் கடைகளில் இருந்து 100 கிலோ இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் கடை உரிமையாளர்களை கடைகளை உடனடியாக மூடுமாறு அதிகாரிகள் எச்சரித்தனர்.