உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க. போட்டியிடவில்லை என்பதை ஜீரணிக்க முடியவில்லை- நடிகை கஸ்தூரி

Published On 2024-06-16 04:11 GMT   |   Update On 2024-06-16 04:11 GMT
  • இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
  • இரட்டை இலை இல்லாமல் ஒரு தேர்தல் நடக்கிறது.

சென்னை:

விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. வேட்பாளராக சி.அன்புமணி போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி வேட்பாளராக டாக்டர் அபிநயா போட்டியிடுகிறார். அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருந்தது.

இந்தநிலையில் விக்கிரவாண்டி தொகுதி சட்டசபை இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இடைத்தேர்தல் நியாயமாக நடக்காது என்பதால் இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இந்தநிலையில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிக்க கூடாது என்று நடிகை கஸ்தூரி கூறியுள்ளார். இது தொடர்பாக நடிகை கஸ்தூரி அளித்த பேட்டி வருமாறு:-

ஜனநாயக நாட்டில் தேர்தலை மக்கள் புறக்கணிக்கவே கூடாது. அதற்கான விழிப்புணர்ச்சியை நாம் ஒவ்வொரு முறையும் சொல்லிக்கொண்டிருக்கும் போது தமிழ்நாட்டின் 2-ம் பெரிய கட்சியான அ.தி.மு.க.வே தேர்தலை புறக்கணிக்கிறது என்பது எனக்கு ஏற்புடையது இல்லை. அவர்கள் போட்டியிட வேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன்.

இரட்டை இலை இல்லாமல் ஒரு தேர்தல் நடக்கிறது என்பது தமிழ்நாட்டில் இது முதல் தடவை என்று நான் நினைக்கிறேன். எனவே இது எனக்கு ஏற்க முடியாத ஒரு அறிவிப்பாக இருக்கிறது. இதை எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகி கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதுதான் என்னைப் போன்ற பலரது விருப்பமாக இருக்கிறது.

தி.மு.க. இருக்கும் இடத்தில் அ.தி.மு.க. அதை எதிர்க்க வேண்டும். அப்போதுதான் அது எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் உருவாக்கிய ஒரு அ.தி.மு.க.வாக இருக்கும். அவர்கள் ஒதுங்கிப்போவது என்பது கண்டிப்பாக பா.ஜ.க. தான் இன்றைக்கு பிரதான எதிர்க்கட்சி, நாங்கள் 3-வது இடத்துக்கு வந்து விட்டோம் என்று அவர்களே வாக்குமூலம் கொடுப்பது போல் இருக்கிறது. என்னாலும், என்னைப்போல் இருப்பவர்களாலும் அதை ஜீரணிக்கவே முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News