உள்ளூர் செய்திகள் (District)

200 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில் அ.தி.மு.க. பிரமுகர் கைது

Published On 2024-07-21 04:44 GMT   |   Update On 2024-07-21 04:44 GMT
  • தனிப்படை போலீசார் பிரதாபராமபுரம் அருகே அறிவழகனை கைது செய்து விசாரித்தனர்.
  • அறிவழகனை சிறையில் அடைத்தனர்.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் அருகே சம்பவத்தன்று தனிப்படை போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது நாகை -திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலை மேலப்பிடாகை அருகே வெளி மாவட்ட பதிவு எண் கொண்ட 3 சொகுசு கார்கள் தொடர்ச்சியாக வேகமாக வந்ததை மறித்து சோதனை மேற்கொண்டனர். அந்த கார்களில் 200 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.

இது குறித்து காரில் வந்தவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த தெட்சிணாமூர்த்தி (வயது 41), அவரது தம்பி சிவமூர்த்தி (38), திருப்பூர் மாவட்டம் இடுவை திருமலைகார்டனை சேர்ந்த மணிராஜ் (36), புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி கவுதம் (36) என்பதும், ஒடிசா மாநிலத்தில் இருந்து கார் மூலமாக ரூ.50 லட்சம் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்களை ஆந்திரா வழியாக வேதராண்யம் கொண்டு சென்று படகு மூலம் கடல் வழியாக இலங்கைக்கு கடத்தி செல்ல இருந்ததும் தெரியவந்தது.

இது குறித்து கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தெட்சிணாமூர்த்தி உள்பட 4 பேரையும் கைது செய்து 200 கிலோ கஞ்சா, 4 செல்போன்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட 3 கார்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து இந்த வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா ? என போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் வேதாரண்யம் கோடியக்காடு பகுதியை சேர்ந்த அறிவழகன் (60) என்பவருக்கு கஞ்சா கடத்தில் வழக்கில் தொடர்பு உள்ளது தெரியவந்தது. அறிவழகன் அ.தி.மு.க.வை சேர்ந்தவர் என்பதும், வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவராக உள்ளதும் தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் பிரதாபராமபுரம் அருகே அறிவழகனை கைது செய்து விசாரித்தனர். அதில் அறிவழகன் கஞ்சா, தங்கம் உள்ளிட்ட கடத்தலில் தொடர்ச்சியாக ஈடுபட்டவர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அறிவழகனை சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News