நவீன தொழில்நுட்பத்தின் மூலம் மகசூலை அதிகரிப்பதே இலக்கு- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்
- வேளாண்மையின் நோக்கம் பயிர்களை வளர்ப்பது அல்ல, மனிதர்களை பண்படுத்துவது.
- டெல்டாவில் 5 லட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது.
சென்னை:
தமிழக சட்டசபையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பச்சை துண்டு அணிந்து பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார். அவர் பேசியதாவது:
வேளாண்மையை தொன்று தொட்டு கடைபிடித்து வருவதாக இலக்கியங்கள் கூறுகிறது. இயற்கையோடு நடத்துகின்ற கண்ணாமூச்சி ஆட்டமாக வேளாண்மை ஆகிவிட்டது.
விவசாய நிலங்கள் குறைந்து வரும் காலத்தில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது அவசியமாகிறது.
வேளாண்மை என்பது பணி அல்ல, வாழ்க்கை முறை. தானியங்கள் மட்டுமல்ல, காய்கறி, பழங்களையும் போதிய அளவில் உற்பத்தி செய்து ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வது முக்கிய சவாலாக உள்ளது.
உற்பத்தி திறனை அதிகப்படுத்துவது இன்றைய முக்கிய தேவையாக உள்ளது. வேளாண்மையின் நோக்கம் பயிர்களை வளர்ப்பது அல்ல, மனிதர்களை பண்படுத்துவது.
நவீன தொழில்நுட்பத்தின் மூலம் மகசூலை அதிகரிப்பதே இலக்கு. ஒரு லட்சத்து 50 ஆயிரம் விவசாிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் வண்ணம் உழவர் சந்தைகள் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் செயல்பட்டு வருகின்றன.
டெல்டாவில் 5 லட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.