9 நாட்களுக்கு பிறகு அனுமதிகும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகம்
- தற்போது வார விடுமுறையை தொடர்ந்து ஆயுத பூஜை, விஜயதசமி என 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- இதனால் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர்.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
தற்போது வார விடுமுறையை தொடர்ந்து ஆயுத பூஜை, விஜயதசமி என 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர்.
கொடைக்கானலில் பெய்த கன மழையால் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர்.
கடந்த 9 நாட்களாக நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இன்று மழை குறைந்து நீர்வரத்து சீரானது. இதனால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் கும்பக்கரை அருவியில் உற்சாகமாக குளியல் போட்டு மகிழ்ந்தனர்.