கவுன்சிலர்களுடன் வாக்குவாதம்; மாநகராட்சி கூட்டத்தில் இருந்து வெளியேறிய மேயர்- பரபரப்பு
- ஆம்னி பஸ் நிலையத்திற்கு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டப்படுகிறது.
- கடைகளுக்கு மறு ஏலம் விடலாம் என கூறி எதிர்ப்பு தெரிவித்து மேயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாநகராட்சியில் இன்று அவசர கூட்டம் நடைபெற்றது. மேயர் சண். ராமநாதன் தலைமை தாங்கினார். துணை மேயர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநகராட்சி அலுவலர்கள் ,கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் முதலாவதாக புதிதாக ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்ட மகேஸ்வரி பேசும்போது, நான் டி.என்.பி.எஸ்.சி குரூப் -2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து அரசு பணியில் சேர்ந்தேன். பெரியகுளம் நகராட்சி, தர்மபுரி நகராட்சிகளில் பணிபுரிந்த போது சிறப்பாக பணியாற்றியதற்காக பல்வேறு விருதுகளை பெற்றேன். திடக்கழிவு மேலாண்மை திட்டத்திலும் தேசிய, மாநில அளவில் விருதுகள் பெற்றுள்ளேன். அதேபோல் தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராக கடந்த சில நாட்களுக்கு முன்பு பொறுப்பேற்று பணிபுரிந்து வருகிறேன். தஞ்சாவூர் மாநகராட்சியிலும் சிறப்பாக பணிபுரிந்து பல்வேறு விருதுகளை பெற கடுமையாக உழைப்பேன் என்றார்.
இதனை தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மேயர் சண். ராமநாதன் பேசியதாவது:-
தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட ஆம்னி பஸ் நிலையத்தை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த பஸ் நிலையத்திற்கு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டப்படுகிறது.
தஞ்சை மாவட்டம் ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு பசுமைப் புரட்சியை ஏற்படுத்திய எம். எஸ். சுவாமிநாதன் பெயர் வைத்ததற்கும், தஞ்சை மேரிஸ் கார்னர் உயர்மட்ட மேம்பாலத்தை ராமநாதன் மருத்துவமனை வரை நீட்டிக்க உத்தரவிட்டதற்கும் முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துறை அமைச்சர் ஆகியோருக்கு மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
தஞ்சாவூர் சரபோஜி மார்க்கெட், பழைய பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் வாடகை அதிகம் இருப்பதாக ஏலம் எடுத்தவர்கள் கூறியிருந்தனர். எனவே அவர்களின் வேண்டுகோளை ஏற்று மறு ஏலம் விட்டு குறைந்த வாடகைக்கு விடப்பட்டுள்ளது.
பெரிய கோவிலில் மாமன்னர் ராஜராஜ சோழன் சதயவிழா வரும் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு மாமன்னர் சோழன் சிலைக்கு மின்அலங்காரம், மரப்படிகள், தடுப்புகள் ஆகியவற்றை தற்காலிகமாக அமைத்து தரும் பணிகள் மேற்கொள்ள ரூ.14 லட்சம் அங்கீகரிக்கவும் ஒப்பந்த புள்ளிகள் கோரி தொடர் நடவடிக்கை மேற்கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது கவுன்சிலர்கள் நீலகண்டன் ,உஷா, காந்திமதி, கண்ணுக்கினியாள் உள்ளிட்ட சிலர் மாமன்ற கூட்டத்தில் விவாதிக்காமல் எப்படி கடைகளுக்கு மறு ஏலம் விடலாம் என கூறி எதிர்ப்பு தெரிவித்து மேயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து மாநகராட்சியில் மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், முறைப்படி தான் ஏலம் நடந்ததாகவும் , கூட்டம் முடிவடைந்து விட்டதாகவும் கூறி மேயர் சண்.ராமநாதன் வெளியேறினார்.
அப்போது கவுன்சிலர்கள் பேசும் மைக் திடீரென அணைக்கப்பட்டது. எங்களது உரிமைகள் பற்றி பேச முன்னறிவிப்பு இன்றி எப்படி மைக் அணைக்கலாம் என கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
இதையடுத்து எதிர்ப்பு தெரிவித்த கவுன்சிலர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். தஞ்சை மாநகராட்சி அவசரக் கூட்டத்தில் நடந்த இந்த அமளி சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.