பல்லடத்தில் வாலிபர் கொலை வழக்கில் 4 பேர் கைது
- கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கைதானவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்லடம்:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த கருப்பசாமி என்பவரது மகன் வினோத் கண்ணன் (வயது 29). இவரை கடந்த 8-ந்தேதி ஒரு மர்ம கும்பல் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரையாம்புதூரில் வைத்து ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டுதப்பி சென்றது.
முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு கொலையாளிகள் ஆக்ரோஷமாக வெட்டி சிதைத்தனர். கொலையாளிகளை பிடிக்க பல்லடம் இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாத்துரை தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த கொலை குறித்து தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.
கொலையான வினோத் கண்ணன் மீது மானாமதுரை உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் கொலை, அடிதடி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு மானாமதுரையைச் சேர்ந்த மைனர் மணி என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் சட்டக்கல்லூரி மாணவரான அக்னி ராஜ் 9-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
இந்தநிலையில் அக்னிராஜ் கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் மைனர் மணி ஆதரவாளர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து அக்னி ராஜின் நண்பர்கள் பழிக்கு பழி வாங்க துடித்தனர். அதற்கான நாளையும் எதிர்நோக்கி காத்திருந்தனர்.
இதற்காகவே அக்னி ராஜ் என்ற வாட்ஸ்-அப் குழு ஏற்படுத்திக் கொண்டு மைனர் மணியின் நண்பர்களான பரமசிவம், ஆகாஷ், அழகு பாண்டி ஆகிய 3 பேரை ஏற்கனவே கொலை செய்தனர். அக்னி ராஜ் கொலையில் சம்பந்தப்பட்ட வினோத் கண்ணன் தப்பிவிட்டார். அவரை தீர்த்துக் கட்ட அக்னிராஜ் நண்பர்கள் நேரம் பார்த்து காத்திருந்தனர்.
பல்லடம் கரையாம்புதூரில் உள்ள நண்பரை பார்க்க வந்தபோது, அவர் வருவதை தெரிந்து கொண்ட அக்னிராஜ் கும்பல் துரத்தி வந்து வினோத் கண்ணனை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். பழிக்குப்பழியாக நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொலையாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் கோவை, ஈரோடு, திருப்பூர், சிவகங்கை ஆகிய பகுதிகளில் முகாமிட்டு குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். கொலையாளிகள் 20க்கும் மேற்பட்ட சிம்கார்டுகளை வாங்கி இன்ஸ்டாகிராமில் குழு உருவாக்கி தகவல்களை பரிமாறிக் கொள்வதும், தொலைபேசி மூலம் இவர்கள் எந்தவித தகவல்களையும் பரிமாறி கொள்வதில்லை என்பதும் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
இந்தநிலையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நிதீஷ் குமார், காளீஸ்வரன் மற்றும் வினோத்கண்ணன் குறித்து தகவல் கொடுத்த சாமிநாதன், பிரபுதேவா ஆகிய 4 பேரை போலீசார் இன்று கைது செய்தனர். மேலும் சிலரை வலைவீசி தேடி வருகின்றனர். கைதானவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் இந்த கொலை சம்பவம் குறித்து மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.