மெரினா கடலில் மூழ்குபவர்களை காப்பாற்றும் போலீஸ் குதிரைப் படையினர்
- செயின் பறிப்பு கொள்ளையர்களை பிடிக்கவும் குதிரைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
- கஞ்சாவுடன் தப்பி ஓடிய வாலிபர் ஒருவரையும் குதிரை படையினர் விரட்டி பிடித்துள்ளனர்.
சென்னை:
சென்னையில் மெரினா கடற்கரையில் குதிரைப்படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு யுவதி, ஷாலினி என 2 சிறுமிகள் கடலில் மூழ்கியுள்ளனர்.அவர்களை குதிரைப்படை வீரர்கள் மின்னல் வேகத்தில் குதிரையில் பாய்ந்து சென்று காப்பாற்றியுள்ளனர்.
இது தவிர குற்றச் செயல் களை தடுப்பதற்கும் குதிரைப்படை வீரர்கள் உதவி செய்து வருகிறார்கள். சென்னை காவல் துறையில் செயல்பட்டு வரும் குதிரைப்படைக்காக குதிரைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. 1670-ம் ஆண்டு மாகாண கவர்னராக இருந்த வில்லியம் என்பவர் இந்த குதிரைப்படையை உருவாக்கினர்.
அப்போது புதுப் பேட்டை, வேப்பேரி கால்நடை மருத்துவமனை, வேப்பேரி போலீஸ் நிலையம், பூக்கடை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை ஆகிய 7 இடங்களில் குதிரைப்படை பிரிவு செயல்பட்டு வந்தது. தற்போது புதுப்பேட்டை பிரிவு மட்டுமே செயல்பட்டு வருகிறது.
இதையொட்டி 25 குதிரை களில் 11 குதிரைகள் குதிரை யேற்றத்தின்போது பிரத்தியேக பயிற்சி பெற்றவையாகும். மீதமுள்ள 14 குதிரைகள் குடியரசு தின அணிவகுப்பு, வி.ஐ.பி. பாதுகாப்பு, கடற்கரை பாதுகாப்பு போன்றவற்றில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றது.
மெரினாவில் கஞ்சாவுடன் தப்பி ஓடிய வாலிபர் ஒருவரையும் குதிரை படையினர் விரட்டி பிடித்துள்ளனர். செயின் பறிப்பு கொள்ளையர்களை பிடிக்கவும் குதிரைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. கபாலி, காவேரி, சோழன், சாரதி, வைகை, தாமிரபரணி என குதிரைக்கு பெயர் வைத்துள்ளனர்.