காண்டிராக்டர் உள்பட 3 பேருக்கு கத்தி குத்து- பா.ஜனதா நிர்வாகி மீது கொலை முயற்சி வழக்கு
- வலியால் அலறி துடித்த 4 பேரையும் அங்கு நின்றவர்கள் மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
- வீரகனூர் பகுதியில் பதட்டம் நீடிப்பதால் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் வீரகனூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கலியன். இவரது மகன் புகழேந்தி என்ற ரவிக்குமார் (37), எம்.பி.ஏ. பட்டதாரி.
இவரும் அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவரும் தூத்துக்குடியில் உள்ள ஒரு மாலில் பெயிண்ட் அடிக்கும் பணியை காண்டிராக்ட் எடுத்து செய்து வந்தனர். இவர்களுடன் ரவிக்குமாரின் அண்ணன் செல்வக்குமார் (44), இவர்களது சித்தப்பா மகன் யவுன் (27) ஆகியோரும் பெயிண்ட் அடித்து வந்தனர்.
இந்நிலையில் சதீசுக்கு தெரியாமல் புதிதாக ஒரு மாலில் பெயிண்ட் அடிக்கும் காண்டிராக்டை ரவிக்குமார் எடுத்துள்ளார். இது சதீசுக்கு தெரிய வந்ததால் இது குறித்து பேசுவதற்காக பா.ஜனதா கட்சியின் தொழில் நுட்ப பிரிவு சேலம் மாவட்ட செயலாளர் சாமுவேல் (37) என்பவரை அழைத்தனர்.
இதையடுத்து நேற்றிரவு 7 மணியளவில் வீரகனூர் அருகே பெரம்பலுர் தேசிய நெடுஞ்சாலையில் சதீஷ், ரவிக்குமார், சாமுவேல் ஆகியோர் கூடினர். அப்போது சதீசுக்கு தெரியாமல் ஏன் காண்டிராக்ட் எடுத்து செய்கிறாய் அவருடன் சேர்ந்து செய் என ரவிக்குமாரிடம், சாமுவேல் கூறினார். இதனை ரவிக்குமார் ஏற்காததால் அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.
அப்போது ரவிக்குமார் அங்கிருந்த கல்லை எடுத்து சாமுவேலை தலையில் தாக்கினார். இதில் சாமுவேல் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் வீட்டிற்கு சென்று கத்தியை எடுத்து வந்து ரவிக்குமாரை கழுத்து, முகம், தலை உள்பட பல இடங்களில் சரமாரியாக குத்தினார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு செல்வகுமாரும், யுவனும் அங்கு வந்து தடுக்க முயன்றனர். அப்போது செல்வகுமாரையும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சாமுவேல் கத்தியால் குத்தினார். யுவனுக்கும் நெற்றியில் வெட்டு விழுந்தது. இதையடுத்து வலியால் அலறி துடித்த 4 பேரையும் அங்கு நின்றவர்கள் மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இந்த மோதலில் பலத்த காயம் அடைந்த ரவிக்குமார், செல்வக்குமார், யுவன் ஆகிய 3 பேரையும் மேல் சிசிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்த புகாரின் பேரில் சாமுவேல் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் டாக்டரிடம் கருத்து கேட்டு அவரை கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். தொடர்ந்து வீரகனூர் பகுதியில் பதட்டம் நீடிப்பதால் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.