போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு
- ஊட்டமலை அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
- பயணிகளுக்கு போதைப்பொருள் குறித்த தீமைகளை எடுத்துரைக்க வேண்டும் என்பது குறித்து எடுத்துறைக்கப்பட்டது.
ஒகேனக்கல்,
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் போலீஸ் துறை சார்பில் போதை பொருட்களை முற்றிலுமாக ஒழிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனைத் தொடர்ந்து பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளிடம் போதைப் பொருட்கள் உலா வருவதை தடுக்கும் விதமாக போதைப் பொருள் இல்லாத தமிழகம் என்ற பிரச்சாரத்துடன் ஊட்டமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒகேனக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள், போதைப் பொருட்களை தடுப்பதற்கு அரசு என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது என்பது குறித்து பள்ளி மாணவ, மாணவிகளிடம் எடுத்துக் கூறப்பட்டது.
போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் உறுதிமொழியை முன்மொழிய அதனைத் தொடர்ந்து ஊட்டமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராசு மற்றும் போலீசார், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதே போன்று ஒகேனக்கல் பஸ் நிலையத்தில் போலீசார் சார்பில் ஆயில் மசாஜ் செய்பவர்களிடமும், பரிசல் இயக்கும் பரிசல் ஓட்டிகளிடமும், பொதுமக்களிடமும், சுற்றுலா பயணிகளிடமும் போதைப்பொருள் இல்லாத தமிழகம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் முன்னிலை வகித்தார். இதில் மசாஜ் செய்பவர்களும், பரிசல் இயக்குபவர்களும், வரும் சுற்றுலா பயணிகளுக்கு போதைப்பொருள் குறித்த தீமைகளை எடுத்துரைக்க வேண்டும் என்பது குறித்து எடுத்துறைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் ஒகேனக்கல் போலீசார் மற்றும் பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளர்கள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பலர் கலந்து கொண்டனர்.