பக்ரீத் பண்டிகை: உடுமலை பஞ்சலிங்க அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்
- சுற்றுலா தளங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
- ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வந்து செல்கின்றனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய கடவுள்கள் ஒருசேர ஒரே குன்றில் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.
கோவிலுக்கு வருகின்ற வழியில் படகு இல்லம், சிறுவர் பூங்கா, நீச்சல் குளம், திருமூர்த்திஅணை உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.அவற்றை பார்வையிடவும் அணைப் பகுதியில் அமர்ந்து புகைப்படம் எடுத்து மகிழவும் மலைமீது உள்ள பஞ்சலிங்க அருவியில் விழுகின்ற மூலிகை தண்ணீரில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காகவும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வந்து செல்கின்றனர்.
இதனால் உடுமலை பகுதியின் சிறந்த சுற்றுலா மற்றும் ஆன்மிகத் தலமாக திருமூர்த்திமலை விளங்கி வருகிறது. இந்த நிலையில் பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக சுற்றுலா தளங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் சுற்றுலாப் பயணிகள் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் திருமூர்த்தி மலைக்கு வருகை தந்தனர்.
பின்னர் அருவிக்கு சென்று குடும்பத்துடன் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.அதைத் தொடர்ந்து அடிவாரப் பகுதிக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பிச் சென்றனர். மழை பொழிவுக்கு பின்பு அருவியில் சீரான முறையில் நீர்வரத்து ஏற்பட்டு உள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.