குன்னூர் சிம்ஸ் பூங்காவில் தேனீக்கள் கொட்டி 3 சுற்றுலா பயணிகள் காயம்
- பூங்காவில் பூத்து குலுங்கிய மலர் செடிகள், இயற்கை காட்சிகளை புகைப்படம் எடுத்து ரசித்தபடி பூங்காவை சுற்றி வந்தனர்.
- மரத்தில் இருந்த தேன்கூட்டம் கலைந்து பூங்கா முழுவதும் தேனீக்கள் சுற்றின.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பல்வேறு வகையிலான மலர்கள் மலர்மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர அரிய வகை மரங்களும் இங்கு உள்ளன.
இந்த பூங்காவை சுற்றி பார்ப்பதற்காக தினந்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றிலா பயணிகள் வந்த வண்ணம் இருப்பார்கள்.
இந்த நிலையில் நேற்று மாலை கோவையை சேர்ந்த லிங்கேஷ், சொக்கலிங்கம், காவ்யாராணி ஆகியோர் குன்னூர் சிம்ஸ் பூங்காவுக்கு வந்தனர்.
அவர்கள் பூங்கா முழுவதும் சுற்றி பார்த்து விட்டு அங்கு இருந்த புல் தரையில் அமர்ந்து சிறிது நேரம் பேசினர்.
பின்னர் பூங்காவில் பூத்து குலுங்கிய மலர் செடிகள், இயற்கை காட்சிகளை புகைப்படம் எடுத்து ரசித்தபடி பூங்காவை சுற்றி வந்தனர்.
அப்போது அங்குள்ள மரத்தில் இருந்த தேன்கூட்டம் கலைந்து பூங்கா முழுவதும் தேனீக்கள் சுற்றின. இதில் எதிர்பாராத விதமாக இவர்கள் 3 பேரையும் தேனீக்கள் கொட்டி விட்டது.
இதில் அவர்கள் 3 பேருக்கு காயம் ஏற்பட்டு வலியால் துடித்தனர். இதை பார்த்த பூங்கா ஊழியர்கள், அவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று பின்னர் ஊர் திரும்பினர்.
சிம்ஸ் பூங்காவை சுற்றி பார்த்து புகைப்படம் எடுத்து ரசித்த சுற்றுலா பயணிகளை தேனீக்கள் கொட்டிய சம்பவம் பூங்காவில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேன்கூடு தானாக கலைந்ததா? அல்லது யாராவது கல்லை எறிந்து தேன் கூட்டை கலைத்து விட்டனரா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.