எர்ணாகுளத்தில் குண்டுவெடிப்பு எதிரொலிசர்வதேச நகரமான ஆரோவில்லில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
விழுப்புரம்:
கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் ஜம்ரா சர்வதேச மாநாட்டு மையத்தில் நேற்று காலை யெகோவாவின் சாட்சிகள் என்ற கிறிஸ்தவ சபையினரின் ஜெபக் கூட்டம் நடைபெற்றது. இதில் 2500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.ஜெபக் கூட்டம் நடைபெற்ற போது காலை 9.45 மணிக்கு அரங்கின் மையப்பகுதியில் பயங்கர சத்தத்துடன் வெடி குண்டு வெடித்தது. அடுத்த சில நிமிடங்களில் அரங்கின் பக்கவாட்டில் அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தன.இந்த குண்டு வெடிப்பில் 2 பேர் பலியானர். 51-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த பயங்கர சம்பவம் தொடர்பா கொச்சியை சேர்ந்த டொமினிக் மார்ட்டின் என்பவர் திருச்சூர் மாவட்டம் கொடகரா போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.அவர், யெகோவின் சாட்சிகள் தவறான தகவல்களை கற்றுத்தந்து, தேச விரோத செயல்களில் ஈடுபட தூண்டுகின்றனர். இதனால் அந்த மாநாட்டு அரங்கிற்கு வெடிகுண்டு வைத்ததாகவும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் யெகோவின் சாட்சிகள் குழுவினருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சர்வதேச நகரமான ஆரோவில்லில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.குறிப்பாக ஆரோவில் நுழைவு வாயில், மாத்ரி மந்திர், இஸ்ரேலை சேர்ந்த யெகோவின் சாட்சிகள் குழுவினர் 30 பேர் வசிக்கும் பகுதி ஆகிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் சர்வதேச நகரமான ஆரோவில்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.