வேப்பனப்பள்ளி பகுதிகளில் பூத்துக் குலுங்கும் மாமரங்கள்
- 500 ஏக்கர் நிலப்பரப்பில் மா சாகுபடி அமோகமாக செய்யப்பட்டு வருகிறது.
- பூக்கள் பூத்து மகசூல் அமோகமாக இருப்பதால் இப்பகுதி விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வேப்பனபள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி, நாச்சிகுப்பம், தீர்த்தம், சிங்கிரிப்பள்ளி, நெடுசாலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் மா சாகுபடி அமோகமாக செய்யப்பட்டு வருகிறது.
இப்பகுதியில் இருந்து ஆண்டுதோறும் பெங்களூரா, நீளம், செந்தூரா, மல்கோவா, பீத்தர், ருமானி, பாங்கனபள்ளி கலாப்பாடு போன்ற மாங்கனிகள் சாகுபடி செய்யப்பட்டு இப்பகுதியில் இருந்து தமிழகத்திற்கு பல்வேறு மாவட்டங்களுக்கும் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில பகுதிகளுக்கும் ஆண்டுதோறும் பல்லாயிரம் டன் கணக்கில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நீர் வளம் நன்றாக இருப்பதால் இப்பகுதியில் அனைத்து கிராங்களிலும் உள்ள மா மரங்களில் மா பூக்கள் பூத்துக் குலுங்குகிறது.
இன்னும் மூன்று மாதங்களில் அனைத்து மாமரங்களிலும் மாங்காய்கள் காய்த்து அறுவடைக்கு தயாராக வரும் நிலையில் தற்போது மா பூக்கள் பூத்து மகசூல் அமோகமாக இருப்பதால் இப்பகுதி விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாங்காய் விலை அதிகரிக்கும் எனவும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
மேலும் இப்பகுதியில் உள்ள மா மரங்களுக்கு மா பூக்களுக்கு மருந்து தெளித்தல் மற்றும் மாமரங்களை சுத்தம் செய்தல் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சாலை ஓரங்களில் உள்ள மா மரங்களில் மா பூக்கள் பூத்து குலுங்குவதால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை மா பூக்கள் கவர்ந்துள்ளது.