திண்டிவனம் பஸ் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை: பெண்ணை மோப்ப நாய் கவ்வி பிடித்ததால் பரபரப்பு
- கர்நாடகா மாநிலம் மங்களூரில் ஆட்டோவில்குக்கர் குண்டுவெடிப்பு நடைபெற்றது.
- 100 மீட்டர் அளவில் உள்ள கடைகளை மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்தனர்.
விழுப்புரம்:
கடந்த சில தினங்களுக்கு முன்பாக கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு மற்றும் கர்நாடகா மாநிலம் மங்களூரில் ஆட்டோவில்குக்கர் குண்டுவெடிப்பு நடைபெற்றது. இது தொடர்பாக பல்வேறு இடங்களில் போலீசார் ஐ எஸ். ஐ. எஸ். அமைப்பில் தொடர்புடைய நபர்களை கைது செய்தும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று திண்டிவனத்தில் உள்ள கோவில்கள் ,மசூதிகள்,வணிக நிறுவனங்கள்,ரயில் நிலையம், பஸ் நிலையம் ஆகிய இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சப்-இன்ஸ்பெக்டர் ரவி,தலைமையிலான சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் கணேசன், ரவிக்குமார்,காவலர்கள் இளங்கோ,மாதவன்,வருண் நெடுஞ்செழியன் ஆகியோர் கொண்ட குழு மோப்பநாய் ராணி உதவியுடன் மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்தனர்.
திண்டிவனம் பஸ் நிலையத்தில் சோதனை செய்து கொண்டு இருக்கும்போது மோப்பநாய் ராணி திடீரென அங்கு பெண் ஒருவரை கவ்வி பிடித்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அந்தப் பெண் மற்றும் அங்கிருந்து 100 மீட்டர் அளவில் உள்ள கடைகளை மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்தனர் மேலும் அந்த பெண்ணிடம் போலீசார் விசாரித்து அவரை அனுப்பி வைத்தனர்.