உள்ளூர் செய்திகள்

தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் நெல்லை டவுண் கல்லணை மாநகராட்சி பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர்.இதில் மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி, மண்டல தலைவர் மகேஸ்வரி, கவுன்சிலர் ரவீந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் அனைத்து துறைகளுக்கும் விரைவில் கட்டிடம் - மதிப்பீட்டு குழுவினர் தகவல்

Published On 2023-08-17 09:28 GMT   |   Update On 2023-08-17 09:28 GMT
  • பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் அடிப்படை வசதி தேவைகள் குறித்து குழுவினர் கேட்டறிந்தனர்.
  • இந்த மாத இறுதிக்குள் பாலத்தில் போக்குவரத்து செல்வதற்கான நடவடிக்கை தொடங்கப்படும்.

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் அரசு திட்டப்பணிகள் குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழு தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் இன்று உறுப்பினர்கள் 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்டனர்.

உயர்மட்ட பாலம் கட்டும் பணி

இதில் உறுப்பினர்கள் ராஜேஷ்குமார், ஜவா ஹிருல்லா , மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, துணை செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இன்று நெல்லையை அடுத்த பொன்னாக்குடியில் நதிநீர் இணைப்பு திட்டப்பணிகள், அதே சாலையில் தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்ட பாலம் கட்டும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதுமான வகுப்பறைகள், கழிப்பறை உள்ளிட்ட மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து பார்வையிட்டனர். மேலும் பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் அடிப்படை வசதி தேவைகள் குறித்து கேட்டறிந்தனர்.

பின்னர், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழு தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

தாமிரபரணி ஆறு, நம்பியாறு, கருமேனியாறு நதிநீர் இணைப்பு திட்டப்பணிகள் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் கடந்த 2009-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. கடந்த ஆட்சி காலங்களில் பணிகள் தொய்வு ஏற்பட்டிருந்தது. தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றதும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது.

இதுவரை 95 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. ஒரு பாலம் கட்டுமானப் பணி முடிவடைந்துள்ளது. அதில் இந்த மாத இறுதிக்குள் போக்குவரத்து செல்வதற்கான நடவடிக்கை தொடங்கப்படும். எஞ்சியுள்ள நதிநீர் இணைப்பு பணிகள் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு முதல்-அமைச்சரால் தொடங்கி வைக்கப்படும்.

கல்லணை அரசுப்பள்ளி

தொடர்ந்து, நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பள்ளியில் அடிப்படை வசதிகள் குறைவாக இருப்பதால் இந்த ஆண்டு மாணவிகளின் சேர்க்கை குறைந்துள்ளது. இனிமேல் பள்ளியில் மாணவிகள் சேர்க்கை குறையாத அளவிற்கு பள்ளிகளில் தேவையான அடிப்படை வசதி களை மேம்படுமங மப்படும். மேலும், பள்ளி அருகில் உள்ள கால்வாயில் அசுத்தமாக இருக்கிறது. அதனையும் சரிசெய்து, பள்ளியில் அதிக கழிப்பறை வசதி, வகுப்பறை வசதி கட்டி கொடுத்து, அனைத்து மாணவிகளும் பயன்பெறும் வகையில் வசதி ஏற்படுத்தி தருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள குழுவின் மூலம் அறிவுறுத்தப்படுகிறது.

மாவட்ட கலெக்டர் அலுவலகம் புதிதாக கட்டப்பட்டு, தனித்தனியாக வெளியில் அமைந்துள்ள துறைகள் அனைத்தையும் பொதுமக்களின் நலன்கருதி ஒரே இடத்தில் கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கூடுதல் கட்டிடம்

அரசு விருந்தினர் மாளிகையில் கூடுதலாக 10 அறைகள் கட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டுள்ளது. ரூ.92 கோடியில் நெல்லை அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டிடம் கட்டப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து கல்லணை பள்ளி மாணவிகள் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்த தேவையை மனுவாக எழுதி மதிப்பீட்டு குழுவினரிடம் வழங்கினர்.

Tags:    

Similar News