போக்சோ-மோசடி வழக்கில் சிறப்பாக புலனாய்வு: 2 பெண் போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு மத்திய அரசின் திறன் பதக்கம்
- தமிழகத்தில் 2 பெண் போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட 7 பேர் இந்த பதக்கத்துக்கு தேர்வாகி உள்ளனர்.
- இன்னொரு போலீஸ் சூப்பிரண்டான மீனா தற்போது தமிழக போலீசில் ஊடக பிரிவில் பணியாற்றி வருகிறார்.
சென்னை:
நாடு முழுவதும் உள்ள பணியாற்றும் போலீஸ் அதிகாரிகளில் சிறப்பாக புலனாய்வு செய்தவர்களை தேர்வு செய்து மத்திய அரசு திறன் பதக்கம் அறிவித்து உள்ளது.
அனைத்து மாநிலங்களிலும் 463 போலீஸ் அதிகாரிகள் இதற்கு தேர்வு பெற்று உள்ள நிலையில் தமிழகத்தில் 2 பெண் போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட 7 பேர் இந்த பதக்கத்துக்கு தேர்வாகி உள்ளனர்.
சிறப்பாக புலனாய்வு செய்ததற்காக போலீஸ் சூப்பிரண்டுகள் வந்திதா பாண்டே, மீனா, போலீஸ் உதவி கமிஷனர்கள் கார்த்திகேயன், நல்லசிவம், இன்ஸ்பெக்டர்கள் அம்பிகா, உதயகுமார், பாலகிருஷ்ணன், தடயவியல் பிரிவு துணை இயக்குனர் சுரேஷ் நந்த கோபால் ஆகியோருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் திறன் பதக்கத்தை அறிவித்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த வந்திதா பாண்டே தமிழக பிரிவை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக உள்ள இவர் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய போது போக்சோ வழக்கு ஒன்றில் சிறப்பாக துப்பு துலக்கி குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்து உள்ளார். இதற்காக அவருக்கு திறன் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்னொரு போலீஸ் சூப்பிரண்டான மீனா தற்போது தமிழக போலீசில் ஊடக பிரிவில் பணியாற்றி வருகிறார். இவர் பொருளாதார குற்றப்பிரிவில் பணியாற்றிய போது மோசடி வழக்கு தொடர்பாக சிறப்பாக புலனாய்வு செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்துள்ளார். அதற்காக எஸ்.பி. மீனாவும் திறன் பதக்கத்துக்காக தேர்வாகி உள்ளார்.
இவர்களுடன் 2 உதவி கமிஷனர்கள், 3 இன்ஸ்பெக்டர்கள் திறன் பதக்கத்தை பெறுகிறார்கள். இதற்கு முன்பு இந்த பதக்கம் சிறந்த நடவடிக்கைக்கான பதக்கம், சிறந்த புலனாய்வுக்கான பதக்கம், அசாதாரண சேவை பதக்கம், சிறப்பு பணி பதக்கம் ஆகிய 4 பதக்கங்கள் வழங்கப்பட்டு வந்தன.
இந்த பதக்கங்களை ஒரே பதக்கமாக கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு அறிவித்தது. இதன்படி வல்லபாய் படேலின் பிறந்த நாளான அக்டோபர் 31-ந்தேதி மத்திய அரசு இதனை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.