உடன்குடி அருகே தலை தீபாவளிக்கு வந்த புதுப்பெண்ணை குத்தி கொன்ற வாலிபர் கைது
- கோவிந்தனின் தங்கை முத்துலட்சுமிக்கும் (19), அழகப்பபுரத்தை சேர்ந்த வெயிலுமுத்துவுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
- எனது அண்ணனை வெட்டிய கோவிந்தன் குடும்பத்தில் யாராவது ஒருவரை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று முடிவு செய்து எதிர்பார்த்து காத்திருந்தேன்.
உடன்குடி:
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி சாதரக்கோன்விளையை சேர்ந்தவர் சிவன். இவரது மகன் கோவிந்தன் (வயது 21). சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தபோது படுக்கபத்து பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் அங்கு வந்துள்ளார்.
அவர் கோவிந்தனிடம் ஒரு முகவரி குறித்து கேட்டபோது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கோவிந்தன் முகவரி கேட்ட வாலிபரை சத்தம் போட்டு விரட்டினார். பின்னர் அந்த வாலிபர் 20-க்கும் மேற்பட்டவர்களுடன் கோவிந்தன் வீட்டுக்கு சென்றார். அங்கு கோவிந்தன் வீட்டில் இல்லாததால் அவர்கள் திரும்பி உள்ளனர்.
இதுதொடர்பாக சமரசம் பேசுவதற்காக படுக்கபத்து பகுதியை சேர்ந்தவர்கள் சாதரக்கோன்விளையை சேர்ந்த மணிகண்டன் (40) என்பவரை அழைத்து சென்றனர். கோவிந்தன், அவரது தந்தை சிவன் ஆகியோரை வரவழைத்து மணிகண்டன் சமரசம் பேசினார். அப்போது ஏற்பட்ட தகராறில் மணிகண்டன் சிவனை தாக்கி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கோவிந்தன் அரிவாளால் மணிகண்டனை வெட்டினார். இதில் படுகாயமடைந்த மணிகண்டன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். பின்னர் கோவிந்தன், சிவன் ஆகியோர் குலசேகரன்பட்டினம் போலீசில் சரண் அடைந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே கோவிந்தனின் தங்கை முத்துலட்சுமிக்கும் (19), அழகப்பபுரத்தை சேர்ந்த வெயிலுமுத்துவுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தலை தீபாவளி கொண்டாடுவதற்காக முத்துலட்சுமி தனது கணவருடன் பெற்றோர் வீட்டுக்கு வந்திருந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை அவர் வீட்டருகே சென்றபோது மணிகண்டனின் தம்பியான தாஸ் (24) என்ற வாலிபர் அங்கு வந்தார். அவர் முத்துலட்சுமியை ஓடஓட விரட்டி கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த குலசேகரன்பட்டினம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முத்துலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடியதாஸ் என்பவரை தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில் நேற்று இரவு கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் போலீசில் கூறியதாவது:-
எனது அண்ணனை வெட்டிய கோவிந்தன் குடும்பத்தில் யாராவது ஒருவரை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று முடிவு செய்து எதிர்பார்த்து காத்திருந்தேன். நேற்று மாலை கோவிந்தன் வீட்டு அருகே கத்தியுடன் சென்றேன். அப்போது அங்கு ஆண்கள் யாரும் வீட்டில் இல்லை. இதனால் ஆத்திரத்தில் நின்று கொண்டிருந்த நான், அந்த வழியாக கோவிலுக்கு சென்று விட்டு திரும்பி வந்துகொண்டிருந்த முத்துலட்சுமியை பார்த்தேன்.
அவரும் கோவிந்தன் குடும்பத்தில் ஒருவர் தானே என்று அவரை தீர்த்து கட்ட முடிவு செய்து, கத்தியுடன் அவரை நோக்கி ஓடினேன். அவர் என்னை பார்த்து பயந்து ஓடினார். ஆனாலும் விடாமல் துரத்தி சென்று கத்தியால் சரமாரி குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனைத்தொடர்ந்து இந்த கொலை சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.