உள்ளூர் செய்திகள்

கோவை மாவட்டத்தில் தீபாவளிக்கு 80 சதவீத பட்டாசுகள் விற்பனை

Published On 2024-11-02 09:28 GMT   |   Update On 2024-11-02 09:28 GMT
  • பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் பலர் அதிகளவில் பட்டாசுகளை வாங்க ஆர்வம் காட்டவில்லை.
  • ஆன்லைனில் பட்டாசுகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.

கோவை:

கோவை மாவட்டத்தில் தீபாவளியை முன்னிட்டு கடந்த வாரம் பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டன. கவுண்டம்பாளையம், சாய் பாபா காலனி, கணபதி, டவுன்ஹால், பீளமேடு, ராமநாதபுரம், சிங்காநல்லூர் உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் 370-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.

இதுதவிர, ஊரக பகுதிகளில் 360-க்கும மேற்பட்ட பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த பட்டாசு கடைகளில் கடந்த வாரம் முதல் விற்பனை தொடங்கினாலும், சில நிறுவனங்கள் ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் ஊதியம் வழங்க காலதாமதம் செய்தது. இதனால் தீபாவளிக்கு 4 நாட்களுக்கு முன்பு முதல் தான் பட்டாசு விற்பனை சூடுப்பிடித்தது. பட்டாசு விலையில் பெரிய அளவில் மாற்றங்கள் இல்லாத நிலையில் பெற்றோர் குழந்தைகளுடன் சென்று பட்டாசுகளை வாங்கி சென்றனர்.

சிவகாசியில் இருந்து நேரடியாக பட்டாசு கொள்முதல் செய்தவர்கள் அதிரடி சலுகை என அறிவித்து 80 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் பட்டாசுகளை விற்பனை செய்தனர். நடப்பாண்டில், பேன்சி ரக பட்டாசுகளையும், வாணவேடிக்கை பட்டாசுகளையும் பொதுமக்கள் அதிகளவில் விரும்பி வாங்கியுள்ளனர். குழந்தைகள் வழக்கம் போல் கம்பி மத்தாப்பு, தீப்பொறி மத்தாப்பு, பிஜிலி, சங்கு சக்கரம் போன்ற வெடிகளை வாங்கி சென்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

மேலும், பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் பலர் அதிகளவில் பட்டாசுகளை வாங்க ஆர்வம் காட்டவில்லை. தவிர, ஆன்லைனில் பட்டாசுகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை இளைஞர்கள் பலர் வாங்கியதால், கடைகளில் பெரிய அளவில் பட்டாசு விற்பனையானது நடக்கவில்லை என கூறப்படுகிறது. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை 80 சதவீதம் பட்டாசு விற்பனை நடந்துள்ளதாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கோவை மாவட்ட பட்டாசு விற்பனையாளர் நலச்சங்கத்தின் நிர்வாகி கூறுகையில், "மாநகரில் கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் 50 கடைகளுக்கு மேல் அதிகமாக பட்டாசு விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. கடைகள் அதிகரித்து இருந்தாலும், எதிர்பார்த்த அளவிற்கு விற்பனை நடந்தது. அதாவது கடைகளில் 80 சதவீதம் பட்டாசு வரை விற்பனை நடந்துள்ளது. பெரும்பாலான கடைகளில் பட்டாசுகள் பெருமளவில் விற்பனையாகி உள்ளது" என்றார்.

Tags:    

Similar News