போதையில் வாகனம் ஓட்டுபவரின் பின்னால் அமர்ந்திருப்பவரிடமும் இன்று முதல் அபராதம் வசூல்- சென்னை காவல்துறை முடிவு
- திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் அடிப்படையில் அபராதம் வசூலிக்கப்படும்.
- குறைந்தபட்சம் ரூ.1,000-ல் இருந்து ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தின்படி, வாகன விதி மீறல் தொடர்பான அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை அண்மையில் வெளியிடப்பட்டது. புதிய வாகன அபராதத் தொகை வருகிற 28-ந்தேதிக்கு மேல் வசூலிக்கப்படும் என்று சென்னை நகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் சாலை விதிகளை மீறும் வாகன் ஓட்டிகளிடம், திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின்படி இன்று முதல் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை காவல்துறை அறிவித்துள்ளது. புதிய சட்ட திருத்தத்தின் படி போதையில் வாகனம் ஓட்டுபவரிடம் அபராதம் வசூலிப்பதுடன், அவரது பின்னால் அமர்ந்திருப்பவருக்கும் அபராதம் விதிக்கப்படும்.
மேலும் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின்படி அபராதம் தொகை பல மடங்கு உயர்த்தப் பட்டுள்ளது. அதன்படி ஹெல்மெட், சீட்பெல்ட் அணியாமல் வாகனங்களை ஓட்டுவது உள்பட போக்குவரத்து விதிகளை மீறினால் குறைந்தபட்சம் ரூ.1,000-ல் இருந்து ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.