திருப்பூர் அங்கன்வாடி மையங்களில் மின்வசதியின்றி தவிக்கும் குழந்தைகள்
- தொழிலாளர்களின் குழந்தைகள் பலரும், தங்களது கல்வியை திருப்பூரில் தொடங்குகின்றனர்.
- மாநகர் முழுவதும் 12 அங்கன்வாடி மையங்களில் மின்வசதி இல்லாததால், நூற்றுக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி 60 வார்டுகளைக் கொண்டது. நாளுக்கு நாள் வெளிமாவட்ட மற்றும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் திருப்பூருக்கு தொழில் தேடி வருவதால் நகரம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது. தொழிலாளர்களின் குழந்தைகள் பலரும், தங்களது கல்வியை திருப்பூரில் தொடங்குகின்றனர். 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஆரம்பக்கால கல்வி மற்றும் வளர்ச்சியில் கவனம் செலுத்தி, குழந்தைகளின் உடல், மொழி, அறிவு மற்றும் சமூக மன எழுச்சி வளர்ச்சிக்கு அடித்தளமாக இருப்பை அங்கன்வாடி மையங்கள். இந்நிலையில் திருப்பூர் மாநகர் கேவிஆர். நகர், பூச்சிக்காடு உட்பட 12 அங்கன்வாடி மையங்களில் மின்வசதி இல்லை என புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக திருப்பூர் மாநகர மக்கள் கூறும்போது, "திருப்பூர் மாநகராட்சி கேவிஆர். நகர் அங்கன்வாடி மையத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தை நம்பி, அப்பகுதியில் வாழும் தொழிலாளர் குடும்பங்கள் ஏராளமாக உள்ளன. தற்போது வரை 30 பேர் படித்துவரக்கூடிய சூழலில், அந்த அங்கன்வாடி மையத்தில் மின்சார வசதி இல்லாததால் குழந்தைகளுக்கு மின்விசிறி மற்றும் மின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
இதேபோல் மாநகர் முழுவதும் 12 அங்கன்வாடி மையங்களில் மின்வசதி இல்லாததால், நூற்றுக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்களது மூத்த குழந்தையை அங்கன்வாடியில் சேர்த்தபோதும், மின் வசதி இல்லை. அதேபோல் 3 ஆண்டுகள் தொடங்கி 7 ஆண்டுகள் கழித்து, அதே அங்கன்வாடி மையத்தில் சேர்த்தபோதும் தற்போதும் மின்வசதி இல்லை. இந்த காரணங்களால், பெற்றோர் பலர் தங்களது குடியிருப்பை கடந்து வேறு பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சேர்க்கும் நிலை ஏற்படுகிறது. அனைத்து தரப்புக்குமான நன்மை பயக்கும் வகையில், குழந்தைகளின் ஊட்டச்சத்து உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்தும் அங்கன்வாடி மையங்கள், அடிப்படை வசதிகளிலும் போதிய கவனம் செலுத்த வேண்டும் என்றனர்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் (திருப்பூர் மாநகர்) ஜெயலதாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
திருப்பூர் மாநகரில் 12 அங்கன்வாடி மையங்களில் மின்வசதி இல்லை. மின்சாரத்துக்கான வைப்புத்தொகை தலா ரூ. 2800 வீதம், அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் இருந்து நிதி வந்துள்ளது. ஆனால் மின்வசதி ஆன்லைன் முறையில் தான் பதிவு செய்ய முடியும் என்பதால், 12 மையங்களும் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒவ்வொரு மின்வாரிய அலுவலகத்திலும் வெவ்வேறு விதமான தகவல்கள் சொல்வதால், நடைமுறை சிக்கல்களால், மின்வசதி வசதி ஏற்படுத்த முடியவில்லை. யார் பெயரில் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பதில் குழப்பம் நீடிக்கிறது. மின் வயர்கள் உள்ளிட்ட மற்ற அனைத்து பணிகளும் முடித்து வைத்துள்ளோம். தற்போது குழந்தைகள் அங்கன்வாடி மையங்களுக்கு வரத்தொடங்கியிருப்பதால், சாப்பிட வைத்த பின், சில குழந்தைகள் தூங்கும். எனவே மின்விசிறி மற்றும் மின் விளக்கு உள்ளிட்டவை தேவை. ஆகவே இது தொடர்பாக விரைவில் 12 அங்கன்வாடி மையங்களுக்கும், விரைவில் மாநகராட்சி மற்றும் மின்வாரியத்திடம் பேசி, மின்வசதி பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.