செஞ்சியில் புதியதாக தொடங்கப்பட்ட அரசு கலை, அறிவியல் கல்லூரியில் வகுப்புகள்: அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்
- அரசு கலைக் கல்லூரி இல்லாமல் இருந்து வந்தது. இது குறித்து பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
- இந்த ஆண்டு புதிதாக அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங்க அரசு அனுமதி அளித்தது.
விழுப்புரம்:
செஞ்சி பகுதி மிகவும் வளர்ந்த பகுதியாகும். எனவே செஞ்சி வட்டாரத்தை பிரித்து மேல்மலையனூர் வட்டாரமும் உருவாக்கப்பட்டது. இந்நிலையில் இப்பகுதியில் அரசு கலைக் கல்லூரி இல்லாமல் இருந்து வந்தது. இது குறித்து பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில் செஞ்சியை சேர்ந்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் முயற்சியால் இந்த ஆண்டு புதிதாக அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங்க அரசு அனுமதி அளித்து இந்த ஆண்டே கல்லூரி தொடங்கப்பட்டு மாணவர் சேர்க்கையும் நடைபெற்றது.அதன்படி நேற்று வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் ரவிசங்கர் வரவேற்றார். இதில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு வகுப்புகளை தொடங்கி வைத்து மாணவ மாணவிகளுக்கு புத்தகங்களை வழங்கினார். முன்னதாக கல்லூரியில் தேசிய கொடியை அமைச்சர் ஏற்றி வைத்தார்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ சீத்தாபதி சொக்கலிங்கம் செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார் செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான், ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், இளம் வழுதி, பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜலக்ஷ்மி செயல் மணி, தலைமை ஆசிரியர் கணபதி ,தேசிய பசுமை படை பாலசுப்ரமணியன், தேசிய மாணவர் படை குமரவேல், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.