பருவநிலை மாற்றம் - சுத்தமான குடிநீரை பருக வேண்டுகோள்
- வெயில், குளிர் என மாறிமாறி பதிவு ஆவதால் சாதாரண காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது.
- டாக்டரின் ஆலோசனையை பெற்று மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொள்வது நல்லது என்றார்.
குடிமங்கலம் :
பருவநிலை மாற்றம் காரணமாக வெயில், குளிர் என மாறிமாறி பதிவு ஆவதால் சாதாரண காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது. மக்கள் சுத்தமான குடிநீரை பருக வேண்டும் என திருப்பூர் சுகாதாரத்துறையினர் அறி வுறுத்தி உள்ளனர்.
டிசம்பர்- ஜனவரி மாதங்களில் நீடித்த குளிர், மாசி மாதம் பிறந்த போதும் தொடர்கிறது. ஒரு புறம் கோடைக்கு முன்னரே வெயில் கொளுத்தி வரும் நிலையில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் குளிரின் தாக்கம் குறையவில்லை.
வழக்கமாக வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் போது வைரஸ் பரவலுக்கான வாய்ப்பு குறையும். வைரஸ் நீடிக்காது. ஆனால் நடப்பாண்டு தொடர் பருவநிலை மாற்றம் காரணமாக நிலை மாறியுள்ளது. காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி, அவ்வப்போது இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் பலருக்கும் துவங்கியுள்ளது.
தொடர் காய்ச்சல் மற்றும் தொண்டை வலியால் பலரும் கவலை அடைந்துள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு சளி, காய்ச்சல் காரணமாக டாக்டரை சந்திக்க வருவோரின் எண்ணிக்கை ஒரு வாரமாக அதிகரிக்க தொடங்கி உள்ளது.
இது குறித்து மாவட்ட சுகாதார பணிகள் துறை துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் கூறுகையில், சுகாதாரமற்ற உணவு, மாசுபட்ட குடிநீர் மூலம் காய்ச்சல் பரவ வாய்ப்புகள் உருவாகிறது.முடிந்தவரை சுத்தமான குடிநீரை மட்டும் அருந்த வேண்டும். தண்ணீரை நன்கு காய்ச்சி ஆற வைத்து குடித்தால் காய்ச்சல் பாதிப்பு ஏற்படாது. டாக்டரின் ஆலோசனையை பெற்று மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொள்வது நல்லது என்றார்.