உள்ளூர் செய்திகள்

200 பழங்குடி மாணவர்களுக்கு கல்வி ஆர்வத்தை தூண்ட பயிற்சி- கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார்

Published On 2023-05-11 10:55 GMT   |   Update On 2023-05-11 10:55 GMT
  • வருகிற 16-ந்தேதி வரை இந்த உண்டு உறைவிட பள்ளியில் கோடை கால சிறப்பு முகாம் நடை பெற உள்ளது.
  • வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு நீங்கள் அனைவரும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.

திருவள்ளுர்:

திருவள்ளுர் மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் 200 பழங்குடியின மாணவ-மாணவிகளின் தனித் திறமைகளை வெளிக்கொண்டு வந்து அவர்களுக்கு கல்வியின் மீது ஆர்வத்தை தூண்டும் வகையிலும், சுய சிந்தனையையும், தொலைநோக்கு பார்வையும் வளர்க்கும் விதமாக செயல்பட்டு வரும் 'சிறகுகள் 200' என்ற திட்டத்தின் மூலம் சிறப்பு முகாம் பூந்தமல்லியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் தொடங்கியது.

அறிவியல், கணினி அறிவியல், நாடகக் கலை, நடனம், பாட்டு, தற்காப்பு கலை, குறும்படம், கைவினைப் பொருட்கள் தயாரித்தல் உள்ளிட்டவைகள் குறித்து சிறப்பு நிபுணர்கள் மூலம் வருகிற 16-ந்தேதி வரை இந்த உண்டு உறைவிட பள்ளியில் கோடை கால சிறப்பு முகாம் நடை பெற உள்ளது. இதை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடி, ஆலோசனைகள் வழங்கினார். பின்னர் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பேசியதாவது:-

காலை முதல் உடற்பயிற்சி, கலை நிகழ்ச்சிகள், ஸ்போக்கன் இங்லீஸ் என நாள் முழுவதும் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பயிற்சிகள் நடைபெறும் நாட்களில் இடைப்பட்ட நாட்களில் நானும் இங்கு வந்து ஆய்வு செய்வேன். நேர்மையுடன் கடின உழைப்புடன் செயல்பட்டால் தோல்வி என்பது இல்லை. உங்கள் அனைவருக்கும் இது ஒரு நல்ல வாய்ப்பு. இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு நீங்கள் அனைவரும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.

மாவட்ட கலெக்டர், காவல் கண்காணிப்பாளர் என பல உயர்ந்த பதவிகளில் நீங்கள் வர வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் ஆசிரியர்கள் உங்களை இப்பயிற்சிக்கு அழைத்து வந்துள்ளார்கள். எனவே, இந்த 7 நாட்கள் உங்கள் அனைவருக்கும் நல்ல ஒரு வாய்ப்பாக அமையும் என நம்புகிறேன்.

ஏதேனும் தேவைகள் என்றால் பயிற்சி ஆட்சியர் வரும்போது அவர்களிடம் தெரிவிக்கலாம். 20-25 வருடங்கள் கழித்து இதுபோன்ற நிகழ்ச்சி நடைபெறும்போது இந்த பயிற்சி பற்றி நீங்களும் ஒரு உயர்ந்த நிலையில் இருந்து சொல்ல வேண்டும் என்பது தான் மாவட்ட கலெக்டராக என்னுடைய கருத்து, என்னுடைய ஆசை. மேலும், இப்பயிற்சியை முறையாக பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) கேத்தரின் சரண்யா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கோ.சரஸ்வதி, மாவட்ட கல்வி அலுவலர் (திருவள்ளூர்) தேன்மொழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News