தென்காசியில் பள்ளி வாகனங்களை கலெக்டர் ஆய்வு
- பள்ளி வாகனங்களை கவனமுடன் இயக்க ஓட்டுநர்களுக்கு,கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
- வாகனத்தில் முதலுதவி பெட்டிகள், மருந்துகள் சரியாக இருக்கிறதா என்றும் சரிபார்க்கப்பட்டது.
தென்காசி:
தென்காசி இ.சி.சங்கரன்பிள்ளை அரசினர் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மைதானத்தில் தென்காசி வட்டார போக்கு வரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பள்ளி பஸ்களை மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் பார்வையிட்டு பாதுகாப்பு வசதிகள் சரியாக உள்ளனவா? என ஆய்வு மேற்கொண்டார்.
ஒவ்வொரு ஆண்டும் புதிய கல்வி ஆண்டை தொடங்குவதற்கு முன்னர் பள்ளி பஸ்களை ஆய்வு செய்வது போன்று இந்த ஆண்டும் தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள 450 பள்ளி வாகனங்களில் 136 பள்ளி வாகனங்களை கலெக்டர் ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து அவர் பள்ளி வாகனங்களை கவனமுடன் இயக்க ஓட்டுநர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். அதுமட்டுமின்றி வாகனத்தில் படிக்கட்டு, அவசர வழி, சி.சி.டி.வி. காமிரா,வேக கட்டுப்பாட்டு கருவிகள் உள்ளதா என்றும், முதலுதவி பெட்டிகள், மருந்துகள் சரியாக இருக்கிறதா என்றும் சரிபார்க்கப்பட்டது.
வாகனத்தில் முன்புறமும், பின்புறமும் யாரும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னர் ஓட்டுநர் வாகனத்தை இயக்குவதற்கு வசதியாக முன்பும், பின்பும் தெரியும் படி காமிரா பொருத்தப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வு செய்தார். அப்போது வட்டார போக்குவரத்து அலுவலர் கண்ணன், மாவட்ட கல்வி அலுவலர் ராமசுப்பு, துணை போலீஸ் சூப்பிரண்டு நாகசங்கர், உதவி மாவட்ட அலுவலர் பிரதீப் குமார், தீயணைப்பு துறை அலுவலர் மகா லிங்கம், நேர்முக உதவி யாளர் முருகன், கண்கா ணிப்பாளர் சிவன் ஆறுமு கம், உதவியாளர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை-2, வட்டார போக்குவரத்து அலுவலகம் மணிபாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.