ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியக முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஆய்வு- மத்திய நிதி அமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார்
- பொருநை அருங்காட்சியகத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கணொளி மூலம் அடிக்கல் நாட்டினார்.
- ஆதிச்சநல்லூரில் உள்ளது உள்ளபடியே 'சைட் மியூசியம்' அமைக்கும் பணியும் நடைபெற உள்ளது.
செய்துங்கநல்லூர்:
ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கையில் மாநில அரசு சார்பில் அகழாய்வு செய்து கிடைத்த பொருள்களை நெல்லையில் அமையவுள்ள பொருநை அருங்காட்சியகம் மூலமாக காட்சிபடுத்த உள்ளனர்.
ரூ. 33.2 கோடி செலவில்
இதற்காக ரூ. 33.2 கோடி செலவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கணொளி மூலம் அடிக்கல் நாட்டினார். இதற்கான விழா கடந்த 18- ந்தேதி நடந்தது. இது போலவே மத்திய அரசு தொல்லியல் துறை மூலமாக ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணி ஈடுபட்டு வருகிறது.இதற்காக இடம் தேர்வு உள்பட பல்வேறு பணிகளை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் பொதுமக்களிடம் இலவசமாக இடத்தினை வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் அருங்காட்சியகம் அமைத்து உலகம் முழுவதும் உள்ள ஆதிச்சநல்லூர் பொருள்களை மீட்டு வந்து இங்கு வைக்க திட்டமிட்டுள்ளனர்.
சைட் மியூசியம்
மேலும் ஆதிச்சநல்லூர் ஏ, பி, சி சைட் என 3 இடங்களில் அகழாய்வு செய்து அந்த இடங்களில் உள்ளது உள்ளபடியே 'சைட் மியூசியம்' அமைக்கும் பணியும் நடைபெற உள்ளது. அருங்காட்சியக பணிக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்ட உள்ளார்கள்.
இதற்காக மத்திய அமைச்சர் வருகை தரும் இடம், மேலும் மேடை அமையும் இடம், அடிக்கல் நாட்டும் இடம் உள்பட இடங்களை கலெக்டர் பார்வையிட்டார். அவருக்கு மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குனர் அருண்ராஜ் விளக்கம் அளித்தார்.
கலெக்டர் ஆலோசனை
மேலும் அருங்காட்சியக பணிகள் குறித்தும், தொல்லியல் துறையினருடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார். பின்னர் ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் தோண்டப்பட்ட குழிகள் மேல் கண்ணாடி மூலம் அமைய உள்ள சைட் மியூசியத்தை நேரில் பார்வை யிட்டு பணிகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து முதல்- அமைச்சர் மு.க.ஸ்டா லின் மூலமாக வெளியிடப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட வரலாறு நூலை அருண்ராஜ், கலெக்டரிடம் அறிமுகப்படுத்தினார்.
நிகழ்ச்சியில் நூலின் ஆசிரியரும், தொல்லியல் துறை அலுவலருமான யதீஸ்குமார், தொல்லியல் ஆய்வாளர் அறவாழி, ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சிவகுமார், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சங்கர் கணேஷ், ஆறாம்பண்ணை பஞ்சாயத்து தலைவர் சேக் அப்துல்காதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.